Published : 19 Jun 2022 05:21 AM
Last Updated : 19 Jun 2022 05:21 AM

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு - அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகள் திருத்த சட்டம் 2021, நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைப்பது, பாதுகாப்பு படையினருக்கான தேர்தல் சட்டத்தை பாலின சமத்துவமாக மாற்றுவது, 18 வயது பூர்த்தியடைந்தோர், ஆண்டுக்கு 4 முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது போன்றவற்றை அனுமதிக்கும் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை செய்து 4 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதார் தகவல்களை பகிர்ந்து கொள்வது ஒருவர் தானாக முன்வந்து மேற்கொள்வது என மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில் வாக்காளர்களாக பதிவு செய்யும்போது, ஒருவரின் அடையாளத்தை நிருபிக்க தேர்தல் பதிவு அதிகாரிகள், ஆதார் விவரங்களை கோர தேர்தல் விதிமுறைகள் திருத்தம் சட்டம் அனுமதி அளிக்கிறது.

மேலும் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ளவர்களிடம், பதிவை சரிபார்க்கவும், வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் உள்ளதா என்பதை அடையாளம் காண ஆதார் எண்களை தேர்தல் பதிவு அதிகாரிகள் கேட்கவும் அனுமதிக்கிறது.

அதே நேரத்தில், ஆதார் எண் இல்லை என்ற காரணத்துக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மறுக்க கூடாது என்றும், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்கக் கூடாது என்றும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் விதிமுறை சட்டத்திருத்தத்தில் தெளிவுபடுத்தப்பட் டுள்ளது.

இது தொடர்பாக கடந்த மே 14-ம்தேதி பேட்டியளித்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, வாக்காளர்கள் ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்வது விருப்பத்துடன் மேற்கொள்வது என்றும், அவ்வாறு வழங்கவில்லை என்றால் அதற்கான போதிய காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஒரு வாக்காளரின் பெயர் பல இடங்களில் இருப்பதை ஒழிக்க முடியும். தற்போது 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் ஒரே ஆண்டில் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தங்களது பெயரை வாக்காளர்களாக பதிவு செய்யமுடியும். இதுவரை, ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிலை இருந்தது. அதற்கு பிந்தைய தேதிகளில் 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க ஓராண்டு காத்திருக்கும் நிலை இருந்தது.

மேலும், தற்போதுள்ள தேர்தல் சட்ட விதிமுறைப்படி ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் மனைவிகள் சர்வீஸ் வாக்காளராக கருதப்படுகிறார். ஆனால் ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரியின் கணவருக்கு இந்த வசதி இல்லை. இதனால் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டபடி, தேர்தல் சட்டத்தை பாலின சமத்துவமாக மாற்ற மனைவி என்ற வார்த்தை வாழ்க்கைத் துணை என மாற்றம் செய்யப்படும்.

தேர்தல் தொடர்பான பொருட்களை சேமித்து வைக்கவும், பாதுகாப்பு படையினர் மற்றும் தேர்தல் பணியாளர்களை தங்க வைப்பதற்கும் இனி எந்த இடத்தையும் தேர்தல் ஆணையம் கேட்டு பெற முடியும். தேர்தல் நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள், நரேந்திர மோடி அரசின் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை. இவ்வாறு அமைச்சர் கிரிண் ரிஜிஜூ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x