

உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்காக ஐக்கிய ஜனதா தளத்தை அடுத்து பாஜகவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார் ராஷ்ட்ரிய லோக் தளம்(ஆர்.எல்.டி) கட்சியின் தலைவர் அஜீத் சிங். தற்போது இரு கட்சிகளையும் தவிர்த்து, அம்மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளார்.
உ.பி.யின் மேற்கு பகுதியில் அதிகமாக வாழும் ஜாட் சமூகத்தினர் ஆதரவுடன் செயல்பட்டு வருவது ஆர்.எல்.டி எனும் ராஷ்ட்ரிய லோக் தளம். முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜீத் சிங் தலைமையிலான இக்கட்சி அடிக்கடி கூட்டணி மாறுவதற்கு பெயர் போனது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் உறுப்பினராக இருந்த அஜீத் சிங், அதற்கு முன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தார். உ.பி.யில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுடனும் மாறி, மாறி கூட்டணி வைத்திருந்தார். ஆனால், கடந்த 2014 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அஜீத் சிங்கிற்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில், அடுத்த வருடம் வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் தன் கட்சியை இணைக்க முடிவு செய்திருந்தார். இதற்காக, அதன் தலைவர் நிதிஷ்குமாருடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தைகளும் முடிந்து இருந்தது. அப்போது, திடீர் என பாஜகவுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தத் துவங்கி விட்டார். இவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் நிலையில் இப்போது அவர் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதியுடன் தேர்தல் கூட்டணி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் சமாஜ்வாதி கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ''அதிகாரபூர்வமாக அறிவிக்கும் அளவிற்கு ஆர்.எல்.டியுடன் பேச்சுவார்த்தை இறுதி வடிவம் பெறவில்லை. எனினும், அவரது கட்சிக் கூட்டணியுடன் 2017 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் பேரமாக அஜீத் சிங்கை மாநிலங்களவை உறுப்பினராக்க முடிவு செய்துள்ளோம். இதன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை வரும் ஞாயிற்றுகிழமை தொடரும்'' எனத் தெரிவித்தனர்.
வரும் ஜூன் 11 ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு 7 உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர். இதன் வேட்பாளர் பட்டியலும் அக்கட்சி கடந்த வாரம் அறிவித்திருந்தது. தற்போது அஜீத் சிங்குடன் நடந்த கூட்டணி பேரம் காரணமாக தனது வேட்பாளர்களில் ஒருவரான அர்விந்த் பிரதாப் சிங்கின் மனுவை வாபஸ் பெற வைத்துள்ளது. மீரட்டை சேர்ந்தவரான இவர் ஜாட் சமூகத்தின் தலைவர்களில் ஒருவர் ஆவார். இதனால், அர்விந்தை உ.பி. மேல்சபையில் அமர்த்த சமாஜ்வாதி முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, மாநிலங்களவை தேர்தலில் மனு செய்ய நாளை கடைசி நாள் என்பதால் இன்று அல்லது நாளை அஜீத் சிங் மாநிலங்களை தேர்தலுக்காக தன் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜீத் சிங்குடனான கூட்டணியால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதிக்கு ஜாட் சமூகத்தின் பெரும்பாலான வாக்குகள் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகித்து வந்த அஜீத் சிங்கிற்கு கடந்த மக்களவை தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. இதனால், அவர் தங்கியிருந்த அரசு குடியிருப்பும் காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், தாம் கூட்டணி வைக்கும் கட்சிகள் மூலமாக தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்று விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் அஜீத் சிங். இது ஐஜத மற்றும் பாஜகவுடன் முடியாமல் போகவே சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருப்பதாகக் கருதப்படுகிறது.