Last Updated : 18 Jun, 2022 05:49 AM

 

Published : 18 Jun 2022 05:49 AM
Last Updated : 18 Jun 2022 05:49 AM

ஐ.டி.வேலையை உதறிவிட்டு கழுதை பண்ணை தொடங்கிய இளைஞர் - ஒரே வாரத்தில் ரூ.17 லட்சத்துக்கு ஒப்பந்தம்

கழுதைகளுடன் சீனிவாச கவுடா

பெங்களூரு: கர்நாடகாவில் பட்டதாரி இளைஞர் ஒருவர் ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கழுதை பண்ணை தொடங்கி ஒரே வாரத்தில் ரூ.17 லட்சத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகேயுள்ள‌ பண்ட்வால் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாச கவுடா (38). மங்களூருவில் பி.ஏ. படித்து முடித்த இவர் கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த 2020-ம் ஆண்டு கரோனா தொற்று காலத்தில் சொந்த ஊரில் இருந்தவாறே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட‌ சீனிவாச கவுடா மாநில அரசின் கால்நடை பராமரிப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டார். அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டார்.

அதில் மிக குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கிடைத்ததால் அடுத்து முயல் பண்ணை அமைத்தார். மங்களூரு வட்டாரத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு முயல் இறைச்சி விற்பனை செய்ததில் சீனிவாச கவுடாவுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. அடுத்தக்கட்டமாக கடந்த ஜூன் 8-ம் தேதி பண்ட்வால் பகுதியில் கழுதை பண்ணை ஒன்றை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து சீனிவாச கவுடா கூறுகையில், ‘‘மங்களூரு, உடுப்பி, பண்ட்வால் உள்ளிட்ட பகுதிகளில் தேடி அலைந்து 10 கழுதைகளை வாங்கி பண்ணையை தொடங்கினேன். அடுத்தடுத்த நாட்களில் கர்நாடகா முழுவதிலும் இருந்து மேலும் 10 கழுதைகளை வாங்கினேன். இதனால் எனது பண்ணையில் கழுதைகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. நான் ஐடி துறையில் பணியாற்றிய போதும் எனக்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் இருந்தது. கரோனா தொற்று காலத்தில் ஐடி துறை பின்னடைவை சந்தித்ததால் எனது ஊதியம் வெகுவாக‌ குறைக்கப்பட்டது. இதனால் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டேன்.

அதில் நல்ல வருமானம் கிடைத்ததால் ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். தற்போது முழு நேரமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன். எனது பண்ணையில் ஆடு, கோழி, முயல் ஆகியவை இருக்கின்றன. இப்போது கர்நாடகாவிலே முதல் முறையாக கழுதை பண்ணை ஆரம்பித்துள்ளேன். இந்திய அளவில் எர்ணாகுளத்தில் ஏற்கெனவே கழுதை பண்ணை ஒன்று இருக்கிறது. ஐடி வேலையை துறந்துவிட்டு கழுதை மேய்ப்பதாக எனது உறவினர்கள் என்னை கேலி பேசினர். ஆனால் அதில் தான் அதிக வருமானமும் மன நிம்மதியும் கிடைக்கிறது. 30 மில்லி கழுதைப் பாலை ரூ.150-க்கு விற்கிறேன். கூடிய விரைவில் கடலோர கர்நாடகாவில் உள்ள அனைத்து வணிக வளாகங்களிலும் கழுதை பால் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.

இதேபோல அழகு சாதன பொருட்கள் உற்பத்தியில் கழுதைப்பால் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் பிரபலமான ஒரு அழகு சாதன நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னுடன் ரூ.17 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x