Published : 18 Jun 2022 03:59 AM
Last Updated : 18 Jun 2022 03:59 AM

வயது வரம்பு உயர்வு முதல் பட்டாலியன் எண்ணிக்கை வரை - 'அக்னி பாதை' குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட தகவல்

ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்தில் முப்படைகளில் சேருவதற்கான வயது வரம்பு நடப்பாண்டில் 21-ல் இருந்து 23-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விரைவில் ஆள்சேர்ப்பு தொடங்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்கள் சேருவதற்கு “அக்னிபாதை” என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை அண்மையில் அனுமதி அளித்தது. இதன்படி 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும் முப்படைகளில் சேரலாம். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியில் நீடிப்பார்கள். பணித் திறனின் அடிப்படையில் அவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தரமாக பணியில் சேர்க்கப்படுவார்கள்.

புதிய திட்டத்தில் நடப்பாண்டில் 46,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்புப் படைகளில் ஆள்சேர்ப்பு நடைபெறவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் அக்னி பாதை திட்டத்தில் முப்படைகளில் சேருவதற்கான வயது வரம்பு 21-ல் இருந்து 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, நடப்பாண்டில் அக்னி பாதை திட்டத்தில் முப்படைகளில் சேருவதற்கான வயது வரம்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தில் அதிக அக்கறை செலுத்தும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதுகாப்புப் படைகளில் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற அக்னி பாதை திட்டம் இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு வழங்கியுள்ளது. இதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய திட்டத்தில் விரைவில் ஆள்சேர்ப்பு பணி தொடங்கப்படும். இதற்கு இளைஞர்கள் இப்போதே தயாராக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விமானப்படையில் 24 முதல்...

இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேற்று கூறியதாவது: அக்னி பாதை திட்டத்தின் கீழ் வீரர்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும். இது தொடர்பான அறிவிக்கை, பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் அடுத்த 2 நாட்களில் வெளியிடப்படும். அதன் பிறகு விரிவான நிகழ்ச்சி நிரலை ராணுவ ஆள்சேர்ப்பு அமைப்புகள் வெளியிடும்.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வாகும் முதல் பிரிவினருக்கான பயிற்சி வரும் டிசம்பர் மாதம் தொடங்கும். பயிற்சியை முடிக்கும் வீரர்கள், அடுத்த ஆண்டு மத்தியில் பணியில் முறையாகச் சேருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறும்போது, “வரும் 24-ம் தேதி முதல் அக்னி பாதை திட்டத்தில் விமானப்படைக்கான ஆள்சேர்ப்பு பணி தொடங்கும்” என்று தெரிவித்தார்.

கார்கில் குழு பரிந்துரை அடிப்படையில்

1999 மே, ஜூன், ஜூலை மாதங்களில் காஷ்மீரின் கார்கில் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் போர் நடைபெற்றது. இதில் 3 ஆண்டுகளுக்கு குறைவான அனுபவம் கொண்ட இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, வெற்றி தேடித் தந்தனர்.

போருக்குப் பிறகு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பிரமணியம், லெப். ஜெனரல் கே.கே.ஹசாரி, பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் வர்கீஸ், சதீஷ் சந்திரா, பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்த பரிந்துரைகளே, இப்போது அக்னி பாதை திட்டமாக உருவெடுத்துள்ளது.

“இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டில் 80 சதவீதம் வீரர்களின் ஊதியம், ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீதம் தொகையில்தான் பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதிகள் மலைப்பாங்கானவை. இந்தப் பகுதிகளில் இளம் வீரர்களால் மட்டுமே திறம்படச் செயல்பட முடியும். பாதுகாப்புப் படை வீரர்கள் இளமையாகவும், முழு உடல் திறனோடும் இருந்தால் மட்டுமே எதிர்காலப் போர்களில் இந்தியா வெற்றி பெற முடியும்” என்று கார்கில் ஆய்வுக்குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

ராணுவம், கடற்படை, விமானப்படை தரப்பில் தனித்தனியாக அளிக்கப்பட்ட பரிந்துரைகளிலும் இதே கருத்து முன்வைக்கப்பட்டது. மேலும், அமெரிக்கா, ரஷ்யா உள்பட 8 நாடுகளின் ராணுவ ஆள்சேர்ப்பு நடைமுறைகள் பரிசீலிக்கப்பட்டு, இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப அக்னி பாதை திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்திய ராணுவத்தின் ஒரு பட்டாலியனில் 1,000 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களை சுமார் 18 அதிகாரிகள் வழிநடத்துவார்கள். வரும் காலங்களில் ஒரு பட்டாலியனில் 700 வீரர்கள் அக்னிபாதை திட்ட வீரர்களாகவும், மீதமுள்ளோர் நிரந்தரப் பணி வீரர்களாகவும் இருப்பார்கள்.

அக்னி பாதை திட்டத்தில் வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். முப்படைகளின் அதிகாரிகள் வழக்கமான தேர்வு முறையில் படைகளில் சேர்க்கப்படுவார்கள். இதன்மூலம் இந்திய பாதுகாப்பு படைகள் இளமையாகவும் வலிமையாகவும் அனுபவம்மிக்கதாகவும் இருக்கும். பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும்தொகை சேமிக்கப்படுவதால் முப்படைகளும் அதிநவீனமயமாக்கப்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x