Published : 17 Jun 2022 01:02 PM
Last Updated : 17 Jun 2022 01:02 PM

அக்னி பாதை எதிர்ப்பு போராட்டம் | பிஹார், உ.பி.யை தொடர்ந்து தெலங்கானாவிலும் வன்முறை: ஒருவர் பலி; 8 பேர் காயம்

அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார், உத்தரப் பிரதேச, தெலங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா ரயில் நிலையத்தில் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தெலங்கானா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ரயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டு என எதுவும் பலன் தராத நிலையில் அவர்கள் வலுக்கட்டாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றார்.

துணை முதல்வர் வீட்டின் மீது தாக்குதல்: பிஹாரில் துணை முதல்வர் ரேணு தேவியின் வீடு தாக்கப்பட்டது. மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இது குறித்து ரேணு தேவி, இதுபோன்ற வன்முறைகள் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. போராட்டக்காரர்கள் இது சமூகத்திற்கான இழப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இன்றும் தொடரும் ரயில் எரிப்புச் சம்பவங்கள்: பிஹாரில் இன்று இரண்டாவது நாளாகவும் ரயில் எரிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று காலை பெகுசராய் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் திரண்ட மாணவர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்டன. லக்கிசராய் மாவட்டத்தில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது. பிஹாரின் சஹஸ்ரா தார்பங்கா பயணிகள் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் இரண்டு பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன.

பிஹாரில் ஆரம்பித்த போராட்டம், பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்துக்கும் பரவியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று காலை மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு முன்னதாக செயல்பட்ட காவலர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

உ.பி. பாலியா ரயில் நிலையம்

குருகிராமில் 144: பிஹார், உ.பி., தெலங்கானாவில் வன்முறைகள் மோசமடையும் சூழலில் ஹரியாணா மாநிலத்தில் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. ஹரியாணாவின் குருகிராம் நகரம் டெல்லி, ஹரியாணா எல்லையில் உள்ளது. இங்கு தொழில்பேட்டைகள் நிறைய உள்ளன. அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் நிலைமை மோசமாகலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ராகுல் டீவீட்: முதன்முதலில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மீண்டும் ட்விட்டரில் மத்திய அரசை சாடியுள்ளார். மத்திய அரசால் யாரையும் திருப்திப்படுத்த முடியவில்லை. அக்னி பாதை திட்டத்தை மாணவர்கள் ஏற்கவில்லை, வேளாண் சட்டங்களை விவசாயிகள் ஏற்கவில்லை, ஜிஎஸ்டியை வியாபாரிகள் ஏற்கவில்லை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் ஏற்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.

ராணுவத்தில் சேர தகுதியற்றவர்கள்: கார்கில் போரின் போது இந்திய ராணுவத்தை வழிநடத்தி வெற்றி பெற்றுத்தந்தவர் விபி மாலிக். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்தப் பேட்டியில், "ராணுவம் என்பது தன்னார்வப் படை. அது ஒன்றும் நலவாரியம் அல்ல. அதில் இருப்பவர்கள் அனைவரும் தேசத்துக்காக போராடும் சிறந்த வீரர்களாக இருக்க வேண்டும். தேசத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டு ரயில்கள், பேருந்துகளை எரித்து சேதத்தை ஏற்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவர்களாவர்" என்று தெரிவித்துள்ளார்.

அக்னி பாதைக்கு எதிர்ப்பு ஏன்: ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான தொகையுடன் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னி பாதை திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த புதிய கொள்கையை பலதரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னி பாதை திட்டத்தை திரும்பபெறக் கோரி பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x