Published : 17 Jun 2022 07:06 AM
Last Updated : 17 Jun 2022 07:06 AM

ஆசியான் அமைப்பை வலுப்படுத்த முயற்சி - வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் எஸ்.ஜெய்சங்கர் தகவல்

இந்தியா-ஆசியான் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, டெல்லியில் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்ற ஆசியான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர். உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளார்.படம்: பிடிஐ

புதுடெல்லி: இந்தியா - ஆசியான் அமைப்பை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஆசியான் கூட்டமைப்பில் சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மியான்மர், மலேசியா, லாவோஸ், இந்தோனேசியா, கம்போடியா, புருணே ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், இந்தியா-ஆசியான் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, டெல்லியில் நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியில் கவனம் செலுத்துவது குறித்தும், உக்ரைன்-ரஷ்யா போருக்கு இடையே நாடுகளுக்கு இடையேயான உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், இயற்கை வளம் நிறைந்த தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த மாநாடு இன்றும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொண்ட சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன், வியட்நாம் வெளியுறவு அமைச்சா் புய் தான்சன், இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மா்சுடி உள்ளிட்டோர் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

இதுதொடர்பாக பிரதமர் மோடிதனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா-ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பு தொடங்கி 30 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், ஆசியான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், பிரதிநிதிகளுடனான சந்திப்பு சுவாரஸ்யமாக இருந்தது” என்றார்.

இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, “இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்ட வலுவான, ஒன்றுபட்ட மற்றும் வளமான ஆசியான் நாடுகள் அமைப்பை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது.

இந்தியா-ஆசியான் அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியா-ஆசியான் அமைப்புகள் தரப்பிலிருந்து புதிய முன்னுரிமையை அடையாளம் காணவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். உலகம் எதிர்கொள்ளும் புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டு ஆசியானின் பங்கு இன்று முன்பை விட மிக முக்கியமானதாக அமைந்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x