மகாராஷ்டிர ஆயுதக் கிடங்கு தீ விபத்து: விசாரணைக்கு ராணுவம் உத்தரவு

மகாராஷ்டிர ஆயுதக் கிடங்கு தீ விபத்து: விசாரணைக்கு ராணுவம் உத்தரவு
Updated on
1 min read

2 ராணுவ அதிகாரிகள் உட்பட 17 பாதுகாப்புப்படை வீரர்கள் பலி

அதிகாரிகள் இருவர், உட்பட 17 பாதுகாப்புப் படை வீரர்களை பலி கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தின் புல்காவ் ஆயுதக் கிடங்கு தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவ ஆயுதக் கிடங்கு தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில், சம்பவ இடத்தை ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் தல்பிர் சிங் பார்வையிட்டார்.

பயங்கர தீ விபத்தில் 17 பேர் பலி

நாக்பூரிலிருந்து 110 கி.மீ. தொலைவில் உள்ள புல்காவில் நாட்டின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கு உள்ளது. இது, ஆசியாவின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கு ஆகும். ராணுவத்துக்காக பல்வேறு தொழிற்சாலைகளில் தயாராகும் வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், நவீன துப்பாக்கிகள் மற்றும் இதர வெடிப்பொருட்கள் ஆகியவை முதலில் இங்குதான் அனுப்பி வைக்கப்படும்.

இங்கு அவை பத்திரமாக இருப்பு வைக்கப்படும். இந்த ஆயுதங்கள் இங்கிருந்து தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இந்தக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பின்னர் தீ மளமளவென பல பகுதிகளுக்கும் பரவியது. வெடி பொருட்கள் வெடித்துச் சிதறின. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் சிக்கி லெப்டினன்ட் கர்னல் உள்ளிட்ட 2 ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான பாதுகாப்புப்படை வீரர்கள் 15 பேர் என மொத்தம் 17 பேர் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் காயமடைந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 19 பேர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காரணமாக ஆயுதக் கிடங்கைச் சுற்றி வசிக்கும் நூற்றுக் கணக்கானவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைந்தார் பாரிக்கர்...

புணே நகரில் இருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

பிரதமர் கவலை

இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில், “புல்காவில் உள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியானது மிகுந்த மன வலியைத் தருகிறது. அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, “ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து எதிர்பாராதது. இந்த விபத்தில் பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. விபத்து நடந்த பகுதியில் தேவையான உதவிகளை செய்யுமாறு வார்தா மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in