

தமிழகம் உரிமை கோரிய பரம்பிக்குளம் உள்ளிட்ட நான்கு அணைகளும் கேரளத்துக்கே சொந்தமானவை என முதல்வர் உம்மன் சாண்டி திட்டவட்டமாகத் தெரிவித்தார். இருப்பினும் சட்டப்பேரவையில் இரண்டாவது நாளாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த 11-ம் தேதி நடைபெற்ற கேரள சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜமீலா பிரகாசம் இவ்விவகாரம் குறித்துக் கேள்வியெழுப்பினார்.
கேரள எல்லைக்குள் அமைந் துள்ள முல்லைப் பெரியாறு மற்றும் பரம்பிக்குளம் -ஆழியாறு தொகுப்பு அணைகளான பரம்பிக் குளம், தூணக்கடவு, பெருவாரிப் பள்ளம் ஆகிய அணைகளுக்கு தமிழகம் உரிமை கோரியுள்ளது.
இந்த அணைகளின் ‘பரா மரிப்பு மற்றும் செயல்பாடு’ என்பனவற்றுடன் ‘உரிமை’ என்ற வார்த்தையை பேரணைகளின் தேசியப் பதிவேட்டில் சேர்க்கும் படி தேசிய அணைப் பாதுகாப்புக் குழு கூட்டத்தில், தமிழகம் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. ஆளும் கேரள அரசின் கவனத்துக்கு இது வரவில்லை. இதன் மூலம் கேரள மாநிலத்தின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறி ஜமீலா பிரகாசம் உள்பட எதிர்க்கட்சியினர் அமளி யில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தில் முதல்வர் உம்மன் சாண்டி இது தொடர்பாக விளக்கமளிக் கையில், அணைகள் கேரளத்துக் குச் சொந்தமானவை என்றார்.
அவர் கூறியதாவது:
தேசிய அணைப் பாதுகாப்புக் குழு கூட்டத்தின் மினிட் புத்தகத் தில், தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதே சமயம், முல்லைப் பெரியாறு, தூணக் கடவு, பெருவாரிப்பள்ளம் மற்றும் பரம்பிக்குளம் அணைகள் கேரளத்தில் பட்டியலில்தான் இடம்பெற்றுள்ளன. அதன் அடிக் குறிப்பில் ‘நான்கு அணைகள் கேரளத்தில் அமைந்துள் ளன. அவை தமிழக பொதுப்பணித் துறையால் இயக்கப்பட்டும், பராமரிக்கப் பட்டும் வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையை, அணைப் பாதுகாப்புக் குழுவின் கவனத் துக்கு கேரள அரசு ஏற்கெனவே கொண்டு சென்றுள் ளது. இதுதொடர்பான பதிவேட்டில் தேவையான மாற்றங்கள் செய்யப் படுவதை கேரள அரசு உறுதி செய்யும். மாநிலத்தின் நலன் பாதுகாக்கப்படும்.
மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள பதிலில், “பேரணை களின் தேசியப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல், எந்த தரப்பையும் கட்டுப்படுத்தாது, எந்தத் தரப்புக்கும் உரிமை அளிக்கவோ, மறுக்கவோ செய்யாது. பதிவேட் டில் ஏதேனும் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது கவனத் துக்குக் கொண்டு வரப்பட்டால் அதைச் சரி செய்யவும் தயாராக இருப்பதாக” குறிப்பிடப்பட் டுள்ளது. ஆனால், முதல்வரின் பதிலில் திருப்தியடையாத எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.