Published : 16 Jun 2022 04:22 AM
Last Updated : 16 Jun 2022 04:22 AM

‘அக்னி பாதை’ திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்புக்காக 3 ஆண்டு பட்டப் படிப்பு - இக்னோ உருவாக்குகிறது

புதுடெல்லி: ‘அக்னி பாதை’ திட்டத்தின்கீழ் முப்படைகளிலும் 4 ஆண்டு சேவையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு, 3 ஆண்டு பட்டப்படிப்பை இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (இக்னோ) உருவாக்க உள்ளது. இதற்கு ஏஐசிடிஇ, என்சிவிஇடி மற்றும் யுஜிசி அங்கீகாரமும் வழங்கப்படும்.

ராணுவத்தில் 4 ஆண்டு சேவைக்கான அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களின் எதிர்கால வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக, 3 ஆண்டு பி.ஏ மற்றும் பி.காம் பட்டப் படிப்புகளையும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் உருவாக்க உள்ளது. இதற்கான நடவடிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இந்தப் பட்டங்கள், ராணுவ வீரர்கள் பெறும் பயிற்சிக்கும், படிக்கும் பாடங்களுக்கும் அங்கீகாரம் வழங்கும். இந்த பட்டப் படிப்புகள் ராணுவ பயிற்சி 50 சதவீத அளவிலும், பாடப்பிரிவுகள் 50 சதவீத அளவிலும் கலந்ததாக இருக்கும். மொழிப் பாடங்கள், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், சமூகவியல், கணிதம், கல்வி, வணிகம், சுற்றுலா, வர்த்தகம், வேளாண் மற்றும் ஜோதிடம், சுற்றுச்சூழல், தகவல் தொடர்பு திறன்கள் போன்ற பாடப் பிரிவுகளும் இந்த இளநிலை பட்டப் படிப்புகளில் இருக்கும். யுஜிசி விதிமுறைகள் மற்றும் தேசிய கல்வி கொள்கையின்படி இந்தப் பட்டப்படிப்பு இருக்கும்.

இதில் முதல் ஆண்டு படிப்புகளில் தேர்ச்சி பெற்றால் சான்றிதழ் வழங்கப்படும். முதல் மற்றும் இரண்டாண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றால் டிப்ளமோ வழங்கப்படும். 3 ஆண்டு பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் பட்டப் படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படும். வீரர்கள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தினாலும், பின்னர் தொடர முடியும்.

இந்த படிப்புகளுக்கு ஏஐசிடிஇ, என்சிவிஇடி மற்றும் யுஜிசி அங்கீகாரம் வழங்கும். இந்தப் பட்டம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்படும். இதற்காக இக்னோவுடன், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது. அக்னி பாதை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், 4 ஆண்டு ராணுவச் சேவையுடன், பட்டப்படிப்பையும் முடித்து திரும்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x