Published : 16 Jun 2022 06:51 AM
Last Updated : 16 Jun 2022 06:51 AM
ஜன்ஜ்கிர் சம்பா: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்பு குழுவினர் 4 நாட்களாக போராடி உயிருடன் மீட்டுள்ளனர். அவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் ஜன்ஜ்கிர் சம்பா மாவட்டத்தின் பிஹ்ரித் கிராமத்தில், 80 அடி ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு மூடப்படாமல் கைவிடப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ராகுல் சாகு என்ற 10 வயது சிறுவன் கடந்த வாரம் சனிக்கிழமை தவறிவிழுந்தான். இவன் பேச்சு மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி.இவனை மீட்கும் முயற்சியில் மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ரோபா குழு, உட்பட 500 பேர் ஈடுபட்டனர்.
இந்த மீட்பு பணிகளை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கவனித்து வந்தார். ராகுலின் பெற்றோரிடம் பேசி நம்பிக்கை அளித்தார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்கு பழங்கள் மற்றும் ஜூஸ் கொடுக்கப்பட்டு வந்தன. அதற்குள் ஆக்ஸிஜனும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வந்தது.
சிறுவனை மீட்க ஆழ்துளை கிணறுக்கு அருகே, அதற்கு இணையாக மற்றொரு ஆழமான குழி ஜேபிசி மூலம் தோண்டப்பட்டது. பாறை நிலப் பகுதியில் ஆழமானகுழி தோண்டுவது மீட்பு குழுவினருக்கு மிகவும் சவாலான பணியாக இருந்தது. அதுவும் கடைசி ஒன்றரை அடி ஆழத்தை மிகவும் கவனமாக தோண்டினர். இதில் சிறிய தவறு ஏற்பட்டாலும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனின் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
80 அடி ஆழம் குழி தோண்டியபின், பின், மற்றொரு குழுவினர் ஆழ்துழை கிணற்றை நோக்கி சுரங்கப்பாதை தோண்டினர். மிகவும் நேர்த்தியாக சுரங்கம் தோண்டப்பட்டு, ஆழ்துளை கிணற்றில் சிக்கிய ராகுல் சாகு நேற்று முன்தினம் நள்ளிரவு உயிருடன் மீட்கப்பட்டான்.
அவன் உடனடியாக பிலாஸ் பூரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டான். இதற்காக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மருத்துவமனையில் ராகுலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பழங்கள், ஜூஸ் போன்ற உணவு மட்டுமே வழங்கப்பட்டதால், ராகுல் பலவீனமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த மீட்பு பணி குறித்து பேட்டியளித்த ஜன்ஜ்கிர் சம்பா மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சுக்லா, ‘‘இது அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ராகுல் தற்போது நன்றாக உள்ளான். அவனுக்கு மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ராகுலின் போராடும் குணம்தான் அவனை மிக மோசமான சூழ்நிலையிலும் காப்பாற்றியுள்ளது’’ என்றார்.
முதல்வர் வாழ்த்து
நான்கு நாள் போராட்டத்துக்குப் பின் ராகுலை உயிருடன் மீட்ட மீட்பு குழுவினரின் முயற்சிகளுக்கு முதல்வர் பூபேஷ் பாகெல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் விரைவில் குணமடையவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT