ராகுல் காந்தியிடம் 3-ம் நாளாக விசாரணை - போராட்டத்தில் ஈடுபட்ட 800 காங்கிரஸ் தலைவர்கள் சிறைபிடிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் நேற்று இரும்புத் தடுப்புகளை மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தொண்டர்களை தடுக்கும் போலீஸார். படம்: பிடிஐ
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் நேற்று இரும்புத் தடுப்புகளை மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தொண்டர்களை தடுக்கும் போலீஸார். படம்: பிடிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விவகார வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ராகுலும் இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்தப் பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கில் கடந்த திங்கள்கிழமை ராகுல் ஆஜரானார். முதல்நாளில் அவரிடம் 9 மணி நேரமும், 2-ம் நாளில் 11 மணி நேரத்துக்கும் அதிகமாகவும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று 3-ம் நாளாக அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காலை 11.35 மணியளவில் வந்த ராகுலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து நடைபெற்ற விசாரணை இரவு வரை நீடித்தது. இந்நிலையில் ராகுலிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், தொண்டர்கள் டெல்லியில கடந்த 3 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

3-ம் நாளான நேற்று காங்கிரஸ், தலைவர்கள் தொண்டர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை.

இதனால் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், கே.சி.வேணுகோபால், சச்சின் பைலட் உள்ளிட்ட தலைவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு இருந்த போலீஸாரின் தடுப்புகளை சில தொண்டர்கள் உடைத்தனர். மேலும் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டது. அது கொழுந்து விட்டு எரிந்ததால் கரும்புகை எழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது மோதல் ஏற்பட்டது. அப்போது போலீஸாரை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இதனிடையே இதுவரை 800 காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், தொண்டர்களை போலீஸார் சிறைபிடித்து வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தடையை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறைபிடித்தோம் என்று சிறப்பு போலீஸ் கமிஷனர் (சட்டம்,ஒழுங்கு மண்டலம்-2) சாகர் பிரீத் ஹூடா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in