

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டை போடும், தடங்கல் ஏற்படுத்தும் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்படுகிறது. இந்த போக்கினால், காங்கிரஸ் கட்சி மக்களிடம் இருந்து மேலும் விலகிக் செல்லும் நிலை ஏற்படும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில், 10 ஆண்டுகள் ஒருவர் பிரதமராக இருந்தார். ஆனால் அவருக்கு எந்தவொரு உரிமையையும் காங்கிரஸ் தரவில்லை. முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத காரணத்தால், ஊழல்கள் அதிகரித்தன.
இந்த ஊழல் கலாச்சாரத்தை நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஒழித்துக் கட்டி, தேசிய வளர்ச்சிக்கான அரசியலாக மாற்றியுள்ளது. முன்பெல்லாம் ஊழல் சகஜமானதாக இருந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில், இந்தியாவின் அகராதியில் இருந்து ஊழல் என்ற வார்த்தையை நரேந்திர மோடி நீ்க்கிவிட்டார்.
மத்திய அரசு முடிவுகளை உடனுக்குடன் எடுத்து, துரிதமான செயல்பாட்டுக்கு வழிவகை செய்வதால், கடந்த 2 ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது.
மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, அடுத்தாண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றியடைய கட்சியினர் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அருண்ஜேட்லி பேசினார்.