Published : 04 Jun 2014 10:00 AM
Last Updated : 04 Jun 2014 10:00 AM

உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை: மத்திய அரசு

உக்ரைனில் வன்முறையால் சிக்கித் தவிக்கும் லுகான்ஸ்க் நகரில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் தலைநகர் கீவ் நகருக்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லுகான்ஸ்க் நகரில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு வன்முறை வெடித்துள்ளதால் உக்ரைன் அரசின் உதவியுடன் அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்களை சுமார் 800 கி.மீ. தூரத்தில் உள்ள கீவ் நகருக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல்கட்டமாக மாணவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக செவ்வாய்க்கிழமை 500 ரயில் டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 500 டிக்கெட்கள் புதன்கிழமை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் தலைவருக்கு கீவ் நகரில் உள்ள இந்திய தூதர் ராஜீவ் கே.சந்தர் கடிதம் எழுதி உள்ளார். அதில் "இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு பாதுகாப்புடன் செல்வதற்கு வசதியாக, போதிய பாதுகாப்பு வழங்குமாறு உள்ளூர் நிர்வாகத்துக்கு தெரிவிக்கவும். அத்துடன் ரயிலில் மாணவர்கள் பத்திரமாக ஏறிய பின்னர் ரயில் அந்த நகரைக் கடக்கும் வரை பாதுகாப்பை உறுதி செய்யவும்" என கூறியுள்ளார்.

உக்ரைன் அரசுக்கும் ரஷியாவுக்கு ஆதரவான பிரிவினைவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் நகரங்களில் வன்முறை வெடித்துள்ளதால், இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தது. மற்ற பகுதிகளில் வசிப்பவர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ரஷியர்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த உக்ரைனின் தன்னாட்சி பெற்ற பகுதியான கிரைமியாவை ரஷியா, கடந்த மார்ச் மாதம் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இதன் பின்னர் ரஷிய ஆதரவாளர்கள் கிழக்கு உக்ரைனின்

சில பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன்பிறகு இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x