Published : 14 Jun 2022 04:32 AM
Last Updated : 14 Jun 2022 04:32 AM

நேஷனல் ஹெரால்டு விவகாரம் | ராகுல் காந்தியிடம் 11 மணி நேரம் விசாரணை - பங்கு, ஆவணங்கள் குறித்து சரமாரி கேள்விகள்

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வருகிறார் ராகுல் காந்தி.படம்: பிடிஐ

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 11 மணி நேரம் மேலாக நீடித்தது.

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் (ஏஜேஎல்) என்பது, நாட்டின் விடுதலைக்கு முன்னதாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியதால் அதன் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்தது. ஆனாலும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.

பின்னர் 2010-ம் ஆண்டில் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள், யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வசம் உள்ளன. இந்த பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனிடையே, பங்கு பரிமாற்ற விவகாரத்தில் அந்நியச் செலாவணி மோசடி நடந்துள்ளதாகக் கூறி அமலாக்கப் பிரிவும் தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு ஜூன் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா, ராகுல் ஆகியோருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. சோனியா கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் வேறு ஒரு தேதியில் ஆஜராக அவகாசம் கேட்டிருந்தார். அதேபோல, ராகுல் காந்தி, வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் அவரும் அவகாசம் கேட்டு இருந்தார்.

இதையடுத்து, ராகுல் காந்தி 13-ம் தேதி ஆஜராக வேண்டும் என புதிய சம்மனை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அனுப்பி இருந்தனர். வரும் 23-ம் தேதி ஆஜராகுமாறு சோனியாவுக்கும் புதிய சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்மனை ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பு நேற்று ஆஜரானார். முன்னதாக, பாஜக தலைமையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி அமலாக்கப் பிரிவு அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றார்.

அமலாக்கப் பிரிவு அலுவலகம் முன்பாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், பேரணியில் நடந்து செல்வதை கைவிட்டு காரில் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு ராகுல் சென்றார்.

அலுவலகத்துக்குள் வந்த ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அவரது வாக்குமூலத்தை 2 அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பதிவு செய்தனர்.

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கும் யங் இந்தியாவுக்குமான தொடர்பு, யங் இந்தியாவில் ராகுல் வகிக்கும் பொறுப்பு, எதற்காக காங்கிரஸ் கட்சி கடன் கொடுக்க முடிவு செய்தது என்பன குறித்தும் கடன் கொடுத்த ஆவணங்கள் குறித்தும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் கேள்விகளை எழுப்பினர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை பிற்பகல் 2.30 மணி வரை நடந்தது. மதிய உணவு இடைவேளையின்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயார் சோனியா காந்தியை ராகுல் காந்தி சந்தித்தார். அதைத் தொடர்ந்து மாலை 4,30 மணி அளவில் மீண்டும் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்துக்கு வந்த ராகுல் காந்தி, அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த விசாரணை இரவு 9.30 மணி வரை நடந்தது.

நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

டெல்லியில் நடந்த பேரணியில் ராகுலுடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால், தீபேந்தர் சிங் ஹூடா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையத்தில் வைத்தனர். கே.சி.வேணுகோபாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது.

போராட்டத்தின்போது போலீஸாரால் ப.சிதம்பரம் தள்ளிவிடப்பட்டதாகவும், இதில் அவரது இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அதேபோல நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அமலாக்கத் துறை அலுவலகங்கள் முன்பு காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத், ஜெய்ப்பூர், போபால், லக்னோ, பாட்னா, சண்டிகர், ராஞ்சி, ராய்ப்பூர் உள்ளிட்ட 25 நகரங்களில் அமலாக்கத் துறையை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x