

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதியை வெளிப்படையாக அறிவிக்குமாறு டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தருக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று (வியாழக்கிழமை) ஒரு கடிதம் எழுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "நரேந்திர மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மோடி இளங்கலை பட்டம் பெறவில்லை என்றால். அவர் எப்படி முதுகலை பட்டம் பெற்றிருக்க முடியும். இது மிகவும் முக்கியமான பிரச்சினை. எனவே, பிரதமர் மோடியின் கல்வித் தகுதியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" எனக் கேஜ்ரிவால் கோரியுள்ளார்.
இந்தியில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
மேலும் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியின் பட்டம் போலியானது. எனவேதான் அதை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட மறுக்கிறது" எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி பல்கலை.க்கு எழுதிய கடிதம்:
தகவல் ஆணையத்துக்கும் கடிதம்:
முன்னதாக கடந்த மாதம் 28-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி என்ன என்பதை பொதுமக்களுக்கு அறிவியுங்கள் என்று மத்திய தகவல் ஆணையத்தை (சிஐசி) அர்விந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியிருந்தார்.
அக்கடிதத்தில், “பிரதமர் நரேந்திர மோடி எந்தவித பட்டப்படிப்பும் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. நாட்டு மக்கள் இது குறித்த உண்மையை அறிய விரும்புகின்றனர்.
இப்படியிருக்கையில், அவரது கல்வித்தகுதி குறித்த ஆவணபூர்வ தகவல்கள் உங்களிடம் இருக்கும் போது கூட அதனை தெரிவிக்க மறுக்கிறீர்கள். ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? இது தவறு.
என் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படுத்த விரும்புகிறீர்கள், ஆனால் அதற்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி பற்றிய தகவல்களை நீங்கள் மறைப்பது குறித்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
தகவல் ஆணையர் உத்தரவு:
அந்தக் கடித்தை மேற்கோள்காட்டி டெல்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்களுக்கு தகவல் ஆணையர் ஓர் உத்தரவு பிறப்பித்தார்.
அதில், 1978-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்றதாக நரேந்திர தாமோதர தாஸ் பெயரில் இருக்கும் பட்டப்படிப்புச் சான்றிதழ், 1983-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் பயின்றதாக அவர் பெயரில் இருக்கும் பட்ட மேற்படிப்புச் சான்றிதழ் குறித்த தகவல்களை விரைவில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அனுப்பிவைக்குமாறு வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.