Published : 14 Jun 2022 01:40 AM
Last Updated : 14 Jun 2022 01:40 AM
புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தவிர்க்க, ஊடகங்களுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான இணையதளங்களில் விளம்பரம் செய்வதை தவிர்க்குமாறு அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களில் அதிக அளவில் விளம்பரங்கள் வருவதாக வந்த தகவல் அடிப்படையில் இந்த அறிவுரையை அமைச்சகம் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஆன்லைன் சூதாட்டத்தால், நாட்டின் பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகள் சமூக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும், ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள், தடை செய்யப்பட்ட இந்த செயலை ஊக்குவிப்பதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் தவறாக வழிநடத்துகின்றன. மேலும், அவை, 2019-ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், செயற்கைக்கோள் தொலைக்காட்சி இணையசேவை ஒழுங்குமுறை சட்டம் 1995, மற்றும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் விளம்பர விதிமுறைகள் 1978 ஆகியவற்றுக்கு எதிராக இருக்கிறது.
பொதுநலன் கருதி, ஆன்லைன் சூதாட்டம் நடக்கும் தளங்களில் விளம்பரங்கள் செய்வதை தவிர்க்குமாறு, அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் விளம்பர இடைத்தரகர்களும், விளம்பர வெளியீட்டாளர்களும் இதுபோன்ற விளம்பரங்களை ஒலிபரப்ப கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சம் 2020 டிசம்பர் 4-ம் தேதி, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான இந்திய விளம்பர தரக் கவுன்சிலின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிலையங்களுக்கு ஆலோசனையை வழங்கியுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT