

நேஷனல் ஹெரால்டு வழக்கு இப்போது மீண்டும் பேசு பொருள் ஆகியிருக்கிறது. ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கு, கர்நாடகத்தை உலுக்கிய போன் ஒட்டுக் கேட்பு வழக்கு, 2 ஜி அலைக்கற்றை வழக்கு என முக்கியமான வழக்குகளுக்குப் பெயர்போன சுப்பிரமணிய சுவாமி தொடங்கிவைத்த வழக்கு இது.
நேஷனல் ஹெரால்டு மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகத்தான் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு, 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ல் தொடங்கியது. அப்போது ஜனதாளக் கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணிய சுவாமிதான் டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் சோனிய காந்தி, ராகுல் காந்தி உள்பட 6 பேர் மீது பொது நிறுவனத்தைக் கைப்பற்றியதாகக் குற்றம் சாட்டு வழக்குத் தொடர்ந்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வெளியிடும் அசோசியட் ஜார்னல்ஸ் லிமிடேட் நிறுவனத்தின் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரித்துவிட்டதாகவும் ஆதாரத்துடன் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை, பிறகு நஷ்டத்தால் கடனில் மூழ்கும் நிலை உருவானது. அப்போது காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடனை அளித்தது. ஆனால், இந்தக் கடனை அந்நிறுவனத்தால் கட்ட முடியவில்லை. அந்தக் கடனை யங் இந்தியா நிறுவனம் கட்டுவதாக முன்வந்தது. அதற்காக அசோசியட் நிறுவனத்தின் சொத்துகளை யங் இந்தியா தன் வசப்படுத்தியது.
அந்தச் சொத்துகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இப்படியான சொத்துப் பரிமாற்றத்தை அசோசியட் நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் தெரிவிக்கவில்லை என சுவாமி தரப்பில் சொல்லப்படுகிறது. முன்னாள் ஒன்றிய சட்ட அமைச்சர் சாந்தி பூஷனும் முன்னாள் மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டய கட்ஜூவும் இதில் பங்குதாரர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. இருவரும் தங்களுக்கு எந்தவிதமான அறிவிப்பும் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை எனக் கருத்துத் தெரிவித்திருந்தனர். நேரு தொடங்கிய இந்நிறுவனத்துக்கு 2000 பங்குதாரர்கள் இருந்தனர் எனச் சொல்லப்படுகிறது.
ஒரு அரசியல் கட்சி ஒரு வியாபார நிறுவனத்துக்குக் கடன் அளிப்பது சட்டப் பிரிவு 29 ஏ படி குற்றமாகும் என சுவாமி வாதிட்டார். அது நேஷனல் ஹெரால்டு வளர்ச்சிக்காகக் கொடுக்கப்பட்டது. அதில் லாப நோக்கம் இல்லை என வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி பெருநகர குற்றவியல் நீதிபதி கோமதி மனோசா, நிறுவனச் சட்டம் 25-ன் படி தொடங்கப்பட்ட யங் இந்தியாவின் நிறுவனத் தொகையை தனியார் லாபமாக மாற்றிப் பயன் பெற முடியாது. ஆனால், அந்தச் சட்டம் இதில் மீறப்பட்டிருப்பதாக நீதிபதி கண்டறிந்து, வழக்கில் சம்பந்தப்பட்ட சோனியா, ராகுல் உள்ளிட்ட 6 பேரை ஆஜராக உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்கள். 2015 டிசம்பரில் இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. மேலும் அவர்களை விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்தது. 2015 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தது. அதே நேரம் விசாரணை நீதிமன்றத்தின் குற்றச்சாட்டை விலக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில் 2014 ஆகஸ்ட் 1-ல் பொருளாதாரக் குற்றங்களை விசாரிக்கும் அமலாக்கத்துறை தானாக முன் வந்து விசாரணையைத் தொடங்கியது. 8 ஆண்டுகளாக அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் இந்த விசாரணைக்காகத்தான் இன்று ராகுல் காந்தி ஆஜராக உள்ளார்.