

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் இப்போது பரபரப்படைந்து வருகிறது. ஒருமித்த கருத்துடன் ஒரு குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திமுகவும் அது குறித்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறது. பாஜக குடியரசுத் தலைவர் தேர்தல் பேச்சுவார்த்தைக்காக ஜே.பி.நட்டாவையும், ராஜ்நாத் சிங்கையும் நியமித்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்பதைப் பார்க்கலாம்.
இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த வியாழன் அன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதை அடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பரபரப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுவருகின்றன.
வரும் ஜூலை 24-ம் தேதியுடன் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி, வேட்பாளர் தேர்வு குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறது. அதுபோல் எதிர்க்கட்சியான காங்கிரஸும் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசித்துவருகிறது.
பாஜக சார்பில் கேரள ஆளுநராக உள்ள ஆரிஃப் முகமது கான், ஜார்கண்ட் ஆளுநரான பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரெளபது மர்மூ ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. தலித் தலைவரான ராம்நாத் கோவிந்தையே திரும்பும் நிறுத்தலாம் எனவும் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் சார்பில் கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சமாஜ்வாடி கட்சி முன்னாள் நாடாளுமன்றச் சபாநாயகர் மீரா குமாரைப் பரிந்துரைக்க உள்ளதாகவும் தெரிகிறது. ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பெயரைப் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிகிறது.
நாடளுமன்ற இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித் தகுதி பெற்றவர்கள். இதன் அடிப்படையில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 48 சதவீத வாக்குகள் உள்ளன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700 எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் மதிப்பு அந்த மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படும். அதன்படி மொத்தம் 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 வாக்குகள் உள்ளன. இதில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 486 வாக்குகள் பாஜகவுன் இருக்கின்றன. காங்கிரஸ் கூட்டணிக்கு 2 லட்சத்து 44 ஆயிரத்து 446 வாக்குகள் இருக்கின்றன.
பாஜகவும் தனது வெற்றியை உறுதிசெய்ய ஆந்திராவில் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. ஒய் எஸ் ஆர் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பிஜூ ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் இருவரிடம் இது தொடர்பாக ஏற்கெனவே பாஜக தலைமை பேசி இருப்பதாகத் தெரிகிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெறவும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதற்காக திரிமுணல் காங்கிரஸ், தேசிய வாதக் காங்கிரஸ், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவைக் காங்கிரஸ் கோரியுள்ளது. விரைவில் அதன் தலைவர்களைச் சந்தித்து சோனியா காந்தி பேச இருப்பதாகத் தெரிகிறது. பஞ்சாப், டெல்லி ஆகிய இரு மாநிலங்களில் ஆளும் ஆம் ஆத் மி, தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி ஆகிய கட்சிகளின் ஆதரவைக் காங்கிரஸ் பெற வேண்டிய அவசியமும் இருக்கிறது. அதற்கான பேச்சிவார்த்தைகளில் இறங்கவும் காங்கிரஸ் தயாராகிவருகிறது. பெரும்பான்மை இல்லாததால் இம்முறை இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.