Published : 13 Jun 2022 12:18 PM
Last Updated : 13 Jun 2022 12:18 PM

அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜர்: பேரணியாக சென்ற தலைவர்கள், தொண்டர்கள் தடுத்து நிறுத்தம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக, ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஏற்கெனவே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், திக்விஜய் சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், கவுரவ் கோகோய், ராஜீவ் சுக்லா, ஜோதிமணி போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களும், கட்சித் தொண்டர்களும் காத்திருந்தனர். கட்சி அலுவலகத்தில் சில நிமிடங்கள் ஆலோசனையில் ஈடுபட்ட ராகுல் காந்தி பின்னர் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி புறப்பட்டார்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத் துறை அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்ததால் வழிநெடுக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பேரணியாக வந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ராகுல் காந்தியும் அவரது வழக்கறிஞர்களும் மட்டும் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

முன்னதாக, பேரணி குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப்சிங் சூரஜ்வாலா கூறுகையில், "ஒட்டுமொத்த டெல்லியையும் தடுப்புவேலிகள் கொண்டு தடுத்துள்ளது. இது ஒன்றே போதும் மத்திய அரசு காங்கிரஸைக் கண்டு அஞ்சுகிறது என்பதை நிரூபிக்க. எங்களை யாரும் அடக்குமுறை செய்ய முடியாது. ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல புதிய அடக்குமுறையாளர்களாலும் அது இயலாது. நாங்கள் அமலாக்கப்பிரிவு அலுவலகம் வரை செல்வோம். ஏழை மக்களின் உரிமைகளுக்காகக்ப் போராடுவோம். நாங்கள் காந்திய வழியில் நடக்கிறோம். 136 ஆண்டுகளாக காங்கிரஸ் சாமான்யர்களின் குரலாக ஒலிக்கிறது. காங்கிரஸ் கட்சி மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யும்.

மோடி அரசு பழிவாங்கல் நடவடிக்கையாக, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சியாக மத்திய அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவிவிடுகிறது. மோடி அரசு கோழைத்தனமான அரசு" என்று விமர்சித்தார்.

வழக்கு பின்னணி: அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர்.

இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை.

இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வசமும் வந்தன. 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது.

இதனிடையே, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

கரோனா தொற்று காரணமாக சோனியா காந்தி ஆஜராக கால அவகாசம் கோரியுள்ள நிலையில், ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x