Last Updated : 13 Jun, 2022 06:55 AM

 

Published : 13 Jun 2022 06:55 AM
Last Updated : 13 Jun 2022 06:55 AM

மாநிலங்களவை குழு, உ.பி. மேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவிகளை இழக்கிறது - சமாஜ்வாதிக்கு பெரும் பின்னடைவு

அகிலேஷ்சிங் யாதவ்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கு தேசிய அளவில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்சிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை குழு மற்றும் உ.பி.யின் மேலவை எதிர்க்கட்சி ஆகியவற்றின் தலைவர் பதவிகளை இழக்கும் சூழல் உருவாகிறது.

ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரிந்து கடந்த 1992 அக்டோபர் 4-ம் தேதி புதிதாக உ.பி.யில் உருவானது சமாஜ்வாதி கட்சி. இதன்நிறுவனர் முலாயம்சிங் யாதவிற்குபின் அவரது மகன் அகிலேஷ்சிங் யாதவ் தலைவராக உள்ளார். இந்த இருவருமே உ.பி.யின் முன்னாள் முதல்வராக இருந்த கட்சிதேசிய அளவில் முக்கியத்துவம்பெற்று வளர்ந்திருந்தது. இக்கட்சிக்கு டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஓரிரு எம்எல்ஏக்கள் தொடர்ந்து இருந்து வந்தனர்.

இந்த நிலை மாறி, தற்போது உ.பி.யில் மட்டும் என சமாஜ்வாதி சுருங்கத் துவங்கி விட்டது. கடந்தமுறை வெறும் 47 எம்எல்ஏ.க்கள் சமாஜ்வாதிக்கு உ.பி. சட்டப்பேரவையில் இருந்தனர். மார்ச்சில் முடிந்த தேர்தலில் 111 என உயர்ந்துள்ளனர். எனினும், உ.பி. மேல்சபையில் இக்கட்சிக்கு இருந்த 50 எம்எல்சி.க்கள் சமீபத்தில் முடிந்த தேர்தலில் 17 எனக் குறைந்துள்ளனர். வரும் ஜுலை 6-ல் மேலும் 6 எம்எல்சி.க்களின் பதவி நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக, சமாஜ்வாதி மேல்சபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், மேல்சபையில் எதிர்க்கட்சிக்கு குறைந்தது 10 எம்எல்சி.க்கள் இருப்பது அவசியம்.

இதேபோல், மாநிலங்களவை யிலும் இக்கட்சிக்கு தனது நல வாழ்வுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பதவியை அகிலேஷின் சித்தப்பாவான பேராசிரியர் ராம் கோபால்யாதவ் வகிக்கிறார்.

எம்பிக்கள் எண்ணிக்கை சரிவு: இவர் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவருடன் சேர்த்து மொத்தம் மாநிலங்களவையில் சமாஜ்வாதிக்கு 5 எம்பி.க்கள் உள்ளனர். இவர்களில், ஜுலையுடன் மூவரின் பதவிக்காலம் முடிகிறது. இந்த மூவரின் இடத்தில் புதிய எம்பி.க்களாக வந்தவர்களில் ஒருவர் மட்டுமே சமாஜ்வாதி கணக்கில் இடம்பெற்றுள்ளார். மற்ற இருவரில் கபில்சிபல் சமாஜ்வாதி ஆதரவுடன் வென்ற சுயேச்சையாயாவார், மற்றவர் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஆவார்.

நாடாளுமன்ற நிலைக்குழுக் களின் தலைவர் பதவி பெறமாநிலங்களவையில் எதிர்க்கட்சி களுக்கு குறைந்தது ஐந்து எம்பி.க்கள் அவசியம். குடியரசு தலைவர் தேர்தலுக்கு பின், ராம் கோபால் யாதவின் நிலைக்குழு தலைவர் பதவி பறிக்கப்படும் வாய்ப்பு கள் உள்ளன. மக்களவையிலும் முலாயம்சிங், சபீக்கூர் ரஹ்மான் மற்றும் டாக்டர்.எஸ்.டி.ஹசன் ஆகிய மூன்று எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்.

இதனால், சமாஜ்வாதி தனது தேசிய கட்சி அந்தஸ்தையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இக்கட்சிக்கு உ.பி.யின் ராம்பூர் மற்றும் ஆஸம்கரில் வரவிருக்கும் மக்களவை இடைத் தேர்தல் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x