Published : 13 Jun 2022 07:04 AM
Last Updated : 13 Jun 2022 07:04 AM

குடியரசுத் தலைவர் தேர்தல் | மம்தா கூட்டத்தில் உத்தவ் பங்கேற்க மாட்டார்: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

உத்தவ் தாக்கரே

மும்பை: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவ தற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பங்கேற்க மாட்டார் என அவரது கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க 15-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்ககாங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜகவை சாராத 8 மாநில முதல்வர்கள் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரண், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகிய முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மம்தாஎழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

அனைத்து பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர்களும் கூடி, நம்நாட்டு அரசியலின் எதிர்காலம்குறித்து விவாதிப்பதற்கு குடியரசுத்தலைவர் தேர்தல் சரியானஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது.

ஏனெனில், நமது ஜனநாயகத்தை பாதுகாக்கும் தலைவரைதேர்ந்தெடுக்கும் பொன்னான வாய்ப்பை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த தேர்தல் வழங்குகிறது. நமது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வரும் நிலையில், விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

எனவே, வரும் 15-ம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இந்த சூழ்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று கூறும்போது, “வரும் 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு உத்தவ் தாக்கரேவுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு வந்துள்ளது. அன்றைய தினம் நானும் உத்தவ் தாக்கரேவும் அயோத்தி செல்ல இருக்கிறோம். எனவே, மம்தா ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் உத்தவ் பங்கேற்க மாட்டார். எங்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்” என்றார். -பிடிஐ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x