

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் தன் கட்சியை இணைக்க இருந்த அஜீத் சிங் திடீர் என தன் முடிவை மாற்றிக் கொண்டார். அடுத்த வருடம் வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்காக பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் புதிய தேசியத் தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நிதிஷ் குமார். பிஹார் முதல்வரான இவர், தன் கட்சியுடன் உ.பி.யின் ராஷ்ட்ரிய லோக் தளத்தை கலைத்து அதன் தலைவர் அஜீத் சிங்கை தம்முடன் இணைக்க முயற்சி செய்தார். இத்துடன் ஜார்கண்ட் மாநிலப் பழங்குடி சமூகத்தவரான பாபுலால் மராண்டியும் தன் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவை இணைக்க முடிவு செய்திருந்தார். இதற்காக, நிதிஷுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் அஜீத் சிங் மட்டும் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். நேற்று திடீர் என உ.பி. பாஜக தலைவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டி ரகசிய பேச்சுவார்த்தை துவங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் உ.பி. மாநில ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சுரேஷ் நிரஞ்சன் கூறுகையில், ‘எங்கள் கட்சியுடன் ராஷ்ட்ரிய லோக் தளம் இணைவது நல்ல துவக்கமாக இருந்தது. இதற்கு உ.பி.யில் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது. ஆனால், இப்போது திடீர் என அஜீத் சிங் பாஜகவுடன் பேசி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
இனி, மதநல்லிணக்கக் கட்சியுடன் இணைய வேண்டுமா? அல்லது மதவாதக்கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமா? என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அஜீத் சிங்கை எதிர்பார்க்காமல் வரும் மே 15-ல் எங்கள் தேசிய தலைவர் நிதிஷ், வாரணாசியில் மெகா கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைக்கிறார்.’ என தெரிவித்தார்.
உ.பி.யின் மேற்குப் பகுதியில் அதிகம் வாழும் ஜாட் சமூகத்தினர் இடையே, செல்வாக்கு கொண்டவர் அஜீத் சிங். முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனான இவர், பாஜகவுடன் கூட்டணி வைப்பது முதன் முறை அல்ல. இதற்கு முன் 2002 ஆம் ஆண்டு உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் முதன் முறையாக கூட்டணி வைத்தார். பிறகு 2004-ல் வந்த மக்களவை தேர்தலிலும் கூட்டணி வைத்து போட்டியிட்டார். இதில், தோல்வி ஏற்பட்டதை அடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்தார் அஜீத் சிங். பிறகு 2014 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டார். இப்போது சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாஜகவுடன் கூட்டணிக்கு முயன்று வருகிறார்.
இதில், உ.பி.யில் மொத்தம் உள்ள 404 தொகுதிகளில் 45-ல் போட்டியிட வேண்டும் என அஜீத் சிங் பாஜகவிடம் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு பாஜக, 25 முதல் 30 தொகுதிகள் மட்டும் ஒதுக்க முன் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இத்துடன், அவரது தந்தை சரண் சிங்கும், தானும் டெல்லியில் சுமார் 40 வருடங்கள் வாழ்ந்த அரசு பங்களாவை தம் தந்தையின் நினைவிடமாக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
அஜீத் சிங் மற்றும் பாபுலால் மராண்டி ஆகிய இருவரும் ஒன்றாக இணைய முடிவு எடுத்த பின் ஐக்கிய ஜனதா தளத்தின் பிரதமர் வேட்பாளராக நிதிஷை முன்னிறுத்த ஆதரவு பெருகி இருந்தது குறிப்பிடத்தக்கது.