Published : 12 Jun 2022 04:44 AM
Last Updated : 12 Jun 2022 04:44 AM

மாநிலங்களவைத் தேர்தல் | மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜக வெற்றி - ஆளும் சிவசேனா, தேசியவாத காங். கூட்டணிக்கு பின்னடைவு

மகாராஷ்டிராவில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 3 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதையடுத்து, தாணேவிலுள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று வெற்றியைக் கொண்டாடிய பாஜக பெண் தொண்டர்கள்.படம்: பிடிஐ

புதுடெல்லி: நாடு முழுவதும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ஏற்கெனவே தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், பஞ்சாப், தெலங்கானா, ஜார்க்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் இருந்து 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வாகினர்.

கர்நாடகா, ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் 16 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள 4 இடங்களில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் சிரோயா, காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதேபோல, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 3 இடங்களில் காங்கிரஸும், ஓரிடத்தில் பாஜகவும் வெற்றி பெற்றன. இந்த மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் முகுல் வாஸ்னிக், ரன்தீப் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோரும், பாஜக சார்பில் கன்ஷியாம் திவாரியும் தேர்வு செய்யப்பட்டனர். பாஜக ஆதரவுடன் அங்கு போட்டியிட்ட ஊடக அதிபர் சுபாஷ் சந்திரா தோல்வி கண்டார்.

அதேசமயம், ஹரியாணா, மகாராஷ்டிராவில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், முடிவுகள் அறிவிக்கப்பட்டதில், பாஜக வேட்பாளர் கிஷண்லால் பன்வார், பாஜகவின் ஆதரவு பெற்ற ஜேஜேபி கட்சியின் சுயேச்சை வேட்பாளரும், ஊடக அதிபருமான கார்த்திகேய சர்மா வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மாக்கன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, காங்கிரஸ் மேலிடத்துக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் 6 இடங்களில் பாஜக 3 இடங்களையும், காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தையும் கைப்பற்றின.

இந்த தேர்தலில் ஆளும் மகா விகாஸ் கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட் டது. ஆனால் 3 இடங்கள் மட்டுமே இந்தக் கூட்டணிக்குக் கிடைத்தன. இது மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் போன்டே, தனஞ்செய் மகாதிக், சிவசேனா சார்பில் போட்டியிட்ட சஞ்சய் ராவத், தேசியவாத காங்.சார்பில் போட்டியிட்ட பிரபுல் பட்டேல், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இம்ரான் பிரதாப்கர்ஹி ஆகியோர் வெற்றி கண்டனர்.

ராஜஸ்தான் மாநில தேர்தலின்போது பாஜக பெண் எம்எல்ஏ ஷோபா ராணி குஷ்வாகா, கட்சி மாறி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து அவர் கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x