Published : 12 Jun 2022 06:16 AM
Last Updated : 12 Jun 2022 06:16 AM
லக்னோ: நூபுர் சர்மாவின் சர்ச்சை கருத்து விவகாரத்தில் உ.பி. நகரங்களில் நேற்று முன்தினம் வன்முறை மோதல்கள் ஏற்பட்ட நிலையில், வன்முறையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ‘புல்டோசர்' படத்துடன் உ.பி. அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கத்தார், சவுதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து பாஜகவில் இருந்து நூபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உ.பி.யின் கான்பூரில் கடந்த 3-ம் தேதி, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு கடையை மூடும்படி முஸ்லிம்கள் கூறியதை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 51 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் குற்றவாளி ஒருவரின் சொத்துகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன.
இந்நிலையில் நூபுர் சர்மா சர்ச்சை பேச்சு விவகாரத்தில் உ.பி.யில் பிரயாக்ராஜ், சகரான்பூர், பிஜ்னோர், மொராதாபாத், ராம்பூர், லக்னோ ஆகிய 6 மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பாக 130-க்கும் மேற்பட்டோர் போலீஸார் கைது செய்துள்ளனார்.
இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார் நேற்று, “நினைவிருக்கட்டும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கு பிறகும் சனிக்கிழமை வரும்” என்று புல்டோசர் படத்துடன் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக புல்டோசருடன் கூடிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மறைமுகமாக அவர் எச்சரித்துள்ளார். இதையடுத்து உ.பி.யில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்நாத் நேற்று உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, “மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமைகளில் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாகரிக சமுதாயத்தில் இத்தகைய நபர்களுக்கு இடமில்லை. எந்த நிரபராதியும் துன்புறுத்தப்படக் கூடாது, அதேவேளையில் ஒரு குற்றவாளி கூட தப்பிக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.
உ.பி. மட்டுமின்றி டெல்லி, ஹைதராபாத், ராஞ்சி, ஹவுரா என நாட்டின் பல்வேறு இடங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்கு பிறகு போராட்டங்கள் நடந்துள்ளன. உ.பி.யில் கடந்த சில ஆண்டுகளாக குண்டர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கையாக அவர்களின் சொத்துகள் ‘புல்டோசர்' மூலம் இடிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT