Published : 12 Jun 2022 02:35 AM
Last Updated : 12 Jun 2022 02:35 AM

'எதிர்க்கட்சியின் போராட்டங்கள் எந்த பலனையும் தரப்போவதில்லை' - தங்கக்கடத்தல் விவகாரத்தில் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: மக்கள் இடதுசாரி அரசாங்கத்துடன் இருக்கிறார்கள், இதனால் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்திவரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தங்கம் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து பினராயி விஜயன் பதவியில் இருந்து விலககோரி எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நான்கு நாளாக காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜினாமா கோரி போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் முதல்வர் பினராயி விஜயன் இதுதொடர்பாக பேசியுள்ளார்.

அதில், "குற்றச்சாட்டுகள் என்னைப் பாதிக்கப்போவதில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே எனது அரசு மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்தன. ஆனால் மக்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு வழங்கினர். நாங்கள் இப்போது மக்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம், நாட்டின் நலனுக்கு எதிராக நிற்கும் எந்த சக்தியின் முன்பும் நாங்கள் சரணடைய மாட்டோம்.

குற்றச்சாட்டுகளை எழுப்புபவர்கள் என்னை மிரட்ட முயற்சிக்க வேண்டாம். இதுபோன்ற முயற்சிகள் எந்த பலனையும் தரப்போவதில்லை. மக்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது" என்ற பினராயி விஜயன், தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஊடகங்கள் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தனது பேச்சில் "தங்கக் கடத்தல் தொடர்பான செய்திகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், அரசாங்கத்தின் பிம்பத்தை மக்கள் முன் சிதைக்க முடியும் என்று ஊடகங்கள் நினைக்கின்றனவா. இதுபோன்ற அறிக்கைகள் உங்கள் நம்பகத்தன்மைக்கு ஏற்றவையா என்பதை நீங்கள் (ஊடகங்கள்) சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. மக்களே இறுதி நீதிபதிகள்" என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x