Published : 11 Jun 2022 07:12 AM
Last Updated : 11 Jun 2022 07:12 AM

மத்தியபிரதேசத்தில் ஆம்புலன்ஸ் இல்லாததால் மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை

போபால்: மத்தியபிரதேச மாநிலம், சத்தார்பூர்மாவட்டம், பவுடி கிராமத்தை சேர்ந்தவர் லக்ஷ்மன் அகிர்வார். இவரது 4 வயது மகளுக்கு கடந்த திங்கள்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அருகில் உள்ள பக்ஸ்வாகா சுகாதார மையத்துக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தாமோஹ் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அதே நாளில் சிறுமி உயிரிழந்தார்.

இதையடுத்து சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல அவரது தாத்தா மன்சுக் அகிர்வார், மருத்துவமனை ஊழியர்களிடம் அமரர் ஊர்தி கேட்டதாகவும் ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் சிறுமியின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இதையடுத்து அவர்கள், சிறுமியின் உடலை போர்வையில் சுற்றி பேருந்து மூலம் பக்ஸ்வாகா எடுத்துவந்தனர். பிறகு அங்கிருந்து கிராமத்துக்கு செல்ல தனி வாகனத்துக்கு பண வசதி இல்லாததால் பக்ஸ்வாகா நகர பஞ்சாயத்தை சிறுமியின் தந்தை லக்ஷ்மன் அணுகியுள்ளார்.

ஆனால் அவர்களும் வாகன ஏற்பாடு செய்ய மறுத்துவிட்டதால், லக்ஷ்மன் வேறு வழியின்றி தனது மகளின் உடலை தானே தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.

ஆனால் சிறுமி குடும்பத்தினரின் குற்றச்சாட்டை தாமோஹ் மாவட்ட மருத்துவமனை அதிகாரி மம்தா திமோரி மறுத்துள்ளார். “எங்களிடம் அமரர் ஊர்தி உள்ளது. செஞ்சிலுவை சங்கம் அல்லது பிறதொண்டு நிறுவனங்கள் மூலம் எங்களால் அமரர் ஊர்தி வசதி செய்துதர முடியும். ஆனால் அமரர் ஊர்தி கேட்டு என்னை யாரும் அணுகவில்லை” என்றார்.

ம.பி.யில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கை காட்டும் மற்றொரு சம்பவம் சாகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இங்கு பகவான்தாஸ் என்பவர் தனது சகோதரனின் சடலத்தை கதகோட்டா சுகாதார மையத்திலிருந்து கை வண்யியில் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. அதிகாரிகள் அமரர் ஊர்தி தர மறுத்துவிட்டதால் உடலை கை வண்டியில் எடுத்துவந்ததாக பகவான்தாஸ் கூறினார்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரி சூயஷ் சிங்காய் கூறும்போது, “நோயாளி இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவரது குடும்பத்தினரிடம் பணியில் இருந்த மருத்துவர் பிரேதப் பரிசோதனைக்கு அறிவுறுத்தியதால் அவர்களே உடலை எடுத்துச் சென்றுவிட்டனர்” என்றார்.

ம.பி.யின் கர்கான் மாவட்டம், பகவன்புராவில் கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். அரசு ஆம்புலன்ஸ் வசதிக்கு பலமுறை முயன்றபோதும் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x