Published : 11 Jun 2022 04:59 AM
Last Updated : 11 Jun 2022 04:59 AM

மாநிலங்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி

கர்நாடகாவில் 4 மாநிலங்களவை இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பெங்களூருவில் நடந்த வாக்குப்பதிவின்போது பாஜக வேட்பாளரும் மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமனை வரவேற்கும் முதல்வர் பசவராஜ் பொம்மை. உடன் முன்னாள் முதல்வர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், பி.எஸ்.எடியூரப்பா உள்ளனர்.படம்: பிடிஐ

புதுடெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் கர்நாடகாவில் போட்டியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி பெற்றார். அங்கு 3 இடங்களை பாஜகவும் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றியுள்ளன.

அதேநேரத்தில் ராஜஸ்தானில் 3 இடங்களில் காங்கிரஸும் ஒரு இடத்தை பாஜகவும் கைப்பற்றின.

தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ல் தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 இடங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர்.

இதையடுத்து, மீதமுள்ள 16 இடங்களுக்கு போட்டி இருந்ததால் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

அதன்படி, கர்நாடகாவில் 4, ஹரியாணாவில் 2, ராஜஸ்தானில் 4, மகாராஷ்டிராவில் 6 இடங்கள் என மொத்தம் 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு 7 மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என்றுதேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால், ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பல எம்எல்ஏக்கள் கட்சி மாறிவாக்களித்த நிகழ்வுகள் நடந்தன. இதனால் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

இரவு 7 மணிக்கு பிறகு ராஜஸ்தான் மாநில முடிவுகள் வெளிவரத் தொடங்கின. அங்கு தேர்தல் நடந்த 4 இடங்களில் 3-ல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு இடத்தை பாஜக வேட்பாளர் கைப்பற்றினார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முகுல் வாஸ்னிக், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தனர். பாஜக சார்பில் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றார். 2-வதாக நிறுத்தப்பட்ட பாஜக வேட்பாளர் சுபாஷ் சந்திரா தோல்வி கண்டார்.

கர்நாடகா

கர்நாடகாவில் 4 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் மொத்தம் 6 பேர் போட்டியிட்டனர். பாஜக சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில்குபேந்திர ரெட்டியும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மஜத கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஸ்ரீனிவாச கவுடா, தங்கள் கட்சி வேட்பாளருக்கு பதிலாக காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பிடிக்கும். அதனால், அந்தக் கட்சிக்கு வாக்களித்தேன்” என்றார்.

அதேபோல், மற்றொரு மஜத கட்சி எம்எல்ஏ ரேவண்ணா, தான் வாக்களித்த வாக்குச்சீட்டை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் காட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார் மனுவை அளித்துள்ளது.

தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ ஒருவர்கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்ததும், மற்றொரு மஜத எம்எல்ஏ தான் வாக்களித்த வாக்குச்சீட்டை காங்கிரஸ் தலைவரிடம் காட்டியதும் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரவு 9 மணி அளவில் கர்நாடகாவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 4 இடங்களில் பாஜக 3 இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

இதனிடையே, மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்திருந்தனர். இதுதொடர்பாக பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ளதலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.

மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் கூட்டணியை (எம்விஏ) சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் விதிகளை மீறி வாக்களித்ததாக பாஜக புகார்தெரிவித்தது. அதேபோல ஹரியாணாவில் சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று காங்கிரஸ் சார்பில் மனு தரப்பட்டுள்ளது.

இதனால் மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், ஹரியாணாவில் 2 இடங்களுக்கும் நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்திடமிருந்து உத்தரவு வரும் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x