

பிஹாரில் ஆதித்ய சச்தேவா என்ற மாணவர் கொல்லப்பட்ட வழக்கில் மற்றொரு குற்றவாளி நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்சி மனோரமா தேவியின் மகன் ராகேஷ் ரஞ்சன் என்கிற ராக்கி. இவர் கடந்த 7-ம் தேதி தனது வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற ஆதித்ய சச்தேவ் என்ற பிளஸ் 2 மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் ஆதித்ய சச்தேவ் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை ராக்கி சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்ற வாளி ராக்கி கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். ராக்கியின் தந்தை பின்டி யாதவ், எம்எல்சி மனோரமா தேவியின் பாதுகாவலர் ராஜேஷ் ரஞ்சன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் ராக்கியின் நண்பரும் கொலை சம்பவத்தின் போது உடனிருந்தவருமான டெனி யாதவ், கயா நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே பத்திரிகையாளர் ராஜ்தியோ ரஞ்சன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தயார் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
‘ஹிந்துஸ்தான்’ என்ற ஹிந்தி நாளேட்டின் சிவான் நகர செய்தியாளரான ராஜ்தியோ ரஞ்சன், அந்நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.
இக்கொலைக்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று கூறும்போது, “பத்திரிகையாளர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க அவரது குடும்பத்தினர் விரும்புவதாக அறிந்தோம். எனவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.