Published : 11 Jun 2022 06:46 AM
Last Updated : 11 Jun 2022 06:46 AM
மும்பை: பிறவியிலேயே நான்கு கை, நான்கு கால் கொண்ட சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவிய நடிகர் சோனு சூட்-டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழில், 'கள்ளழகர்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சோனு சூட். தொடர்ந்து மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தியிலும் நடித்து வரும் சோனு சூட், கரோனா காலகட்டத்தில் செய்த உதவிகள், இந்தியா முழுவதும் அவர் புகழைப் பரப்பின.
இந்நிலையில், நான்கு கை, நான்கு கால் கொண்ட சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு சோனு சூட் உதவி இருக்கிறார். பிஹார் கிராமத்தை சேர்ந்த சாமுகி குமாரி என்ற சிறுமி, பிறவியிலேயே நான்கு கால், நான்கு கைகளுடன் இருந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், அந்தச் சிறுமியை சூரத்தில் உள்ள மருத்துவமனையில் சோனு சூட் சேர்த்தார். கடந்த புதன்கிழமை சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. 7 மணி நேரம் நடந்த சிகிச்சையில் அதிகப்படியாக இருந்த கை, கால் நீக்கப்பட்டன.
சிறுமி நலமாக இருக்கிறார் என்றும் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்ப இருக்கிறார் என்றும் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். இத்துடன் சாமுகி குமாரியின் கல்விக்கும் உதவுவதாக சோனு சூட் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் அவரைப் பாராட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT