

ஆந்திர மாநில தலைமைச் செயலகம் வரும் ஜூன் 21-ம் தேதியிலிருந்து, புதிதாக உருவாகி வரும் அமராவதியில் செயல்படும் என்று மாநில துணை முதல்வர் சின்ன ராஜப்பா தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் அமராவதியில் உருவாகி வருகிறது. வரும் ஜூன் மாதத்திலிருந்து தலைமை செயலகம் அமராவதியில் செயல்படும் என்று முதல்வர் சந்திரபாபு கூறியிருந்தார். இதற்கு தலைமை செயலக ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படிப்படியாக தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் திட்டமிட்டபடி, ஒரே கட்டமாக அனைத்து ஊழியர்களும் அமராவதியிலிருந்து பணியாற்ற வேண்டுமென சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக கூறிவிட்டார். இதற்கு ஆந்திர தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளது.
இதனிடையே, துணை முதல்வர் சின்ன ராஜப்பா விஜய வாடாவில் நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, “ஆந்திர தலைமைச் செயலகம் அடுத்த மாதம் 21-ம் தேதி முதல் அமரா வதியில் இருந்து செயல்படும். இப்போது ஹைதராபாதில் தங்கி பணியாற்றி வரும் தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் இனிமேல் குண்டூர் மற்றும் விஜயவாடாவில் தங்கி பணியாற்ற வேண்டும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் போர்க் கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.