

ஜே.என்.யூ.பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் தனது உடல்நிலை மோசமான காரணத்தால் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.
ஜே.என்.யூ. பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தங்கள் மீது பிறப்பித்த தண்டனை உத்தரவை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்களும் கண்ணய்யா குமார் தலைமையில் 19 மாணவர்கள் பல்கலை வளாகத்தில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினர்.
இன்றுடன் உண்ணாவிரதம் தொடங்கி 12 நாட்களாகிவிட்டது. உடல் நிலை மோசமானதன் காரணத்தால் இதுவரை கண்ணய்யா குமார், உமர் காலித் உட்பட 7 மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
கண்ணய்யா கடந்த சனிக்கிழமை போராட்டத்தை வாபஸ் பெற்றார். இந்நிலையில் இன்று காலை உமர் காலித் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களின் அளவு மிகவும் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உண்ணாவிரத போராட்ட பின்னணி:
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குரு தூக்கில் போடப்பட்டதற்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் மாணவர்கள் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக, ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார், மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சாரியா ஆகியோர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர்.
இதற்கிடையே, ஜேஎன்யூ.வில் நடந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்த 5 பேர் உயர்மட்ட கமிட்டி பல்கலை. நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது.
அதன் அடிப்படையில், கண்ணய்யா குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர 13 மாணவர்களுக்கும் அபராதம் விதித்தது. உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா, முஜீப் ஆகியோர் தற்காலிகமாக பல்கலை.யில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி, கண்ணய்யா குமார் தலைமையில் 19 மாணவர்கள் பல்கலை வளாகத்தில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினர்.