பிஹார் மாநிலத்தில் 191 கி.மீ. தூரம் ரயில் இன்ஜினுக்கு அடியில் பயணம் செய்த மனநோயாளி

பிஹார் மாநிலத்தில் 191 கி.மீ. தூரம் ரயில் இன்ஜினுக்கு அடியில் பயணம் செய்த மனநோயாளி
Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநிலத்தில் ஒருவர் ரயில் இன்ஜினுக்கு கீழே அமர்ந்து 191 கி.மீ பயணம் செய்துள்ளார். எனினும், அவர் பாதுகாப்பாக பயணம் செய்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பிஹார் மாநிலத்தின் ராஜ்கிர் நகரில் இருந்து வாரணாசிக்கு புத்தபூர்ணிமா சாரநாத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த திங்கட் கிழமை புறப்பட்டது. அந்த ரயில் பிஹார் மாநில தலைநகர் பாட்னா வழியாக அதிகாலை 4.10 மணியளவில் கயா வந்தடைந்தது.

ரயிலை நிறுத்திவிட்டு அதன் இன்ஜின் ஓட்டுநர் சவுத்ரி கீழே இறங்கினார். அப்போது ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்கும் சத்தம் கேட்டது. ரயில் இன்ஜின் கேபின் பகுதியில் இருந்து சத்தம் வந்ததால் ஆச்சர்யம் அடைந்த சவுத்ரி கீழே குனிந்து இன்ஜினுக்கு அடியில் பார்த்தார். அப்போது ரயில் சக்கரத்துக்கு மேலே உள்ள இடைவெளி பகுதியில் ஒருவர் அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மற்றும் ரயில் நிலைய ஊழியர்களிடம் ஓட்டுநர் தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து ரயில் இன்ஜின் அடியில் அமர்ந்திருந்த நபரை மீட்டனர். அவரது செய்கை மற்றும் பேச்சு மூலம் அவர் மனநோயாளி என தெரியவந்தது.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்கிர் நகரில் இருந்து கயா வரை 191 கி.மீ தூரத்துக்கு ரயில் இன்ஜின் அடியில் அந்த நபர் ஆபத்தான முறையில் பயணம் செய்தாலும் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் உயிர் தப்பி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in