Published : 08 Jun 2022 06:21 AM
Last Updated : 08 Jun 2022 06:21 AM
புதுடெல்லி: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1989-ம் ஆண்டில் அக்னி 1 ஏவுகணை முதல்முறையாக சோதனை செய்யப்பட்டது. இது 1,200 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயக்கூடியது. அக்னி பிரைம் (2,000 கி.மீ.), அக்னி 2 (3,500 கி.மீ.), அக்னி 3 (3,000 முதல் 5,000 கி.மீ.), அக்னி 4 (4,000 கி.மீ.), அக்னி 5 (8,000 கி.மீ.) என அடுத்தடுத்து அக்னி வகை ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அடுத்ததாக அக்னி 6 ஏவுகணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது 12,000 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள அக்னி வகை ஏவுகணைகள் அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்னி 4 ஏவுகணை ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இது 4,000 கி.மீ. தொலைவு வரை பாயக்கூடியது. 1,000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அக்னி வகை ஏவுகணைகள் மூலம் சீனா மற்றும் பாகிஸ்தானின் எந்த பகுதி மீதும் இந்திய ராணுவத்தால் தாக்குதல் நடத்த முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT