

முக்கிய பிரமுகர்களுக்கான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலி காப்டர் பேர ஊழல் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், “ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த இத்தாலி நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டுள்ளது. எனவே அவர்களுக்கு எதிராக இந்தியாவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்தி சிங் அடங்கிய அமர்வு இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யக் கோரி மத்திய அரசுக்கும், சிபிஐக்கும் உத்தரவிட்டது.