Published : 07 Jun 2022 07:42 PM
Last Updated : 07 Jun 2022 07:42 PM

“அனைவரையும் உள்ளடக்கியதே மோடி அரசின் கோட்பாடு” - கத்தாரில் குடியரசுத் துணைத் தலைவர் பேச்சு

கத்தாரில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

கத்தார்: “அனைவரையும் உள்ளடக்கியதுதான் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கோட்பாடு” என்று கத்தாரில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார்.

மூன்று நாள் பயணமாக கத்தார் சென்றுள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு, தோஹாவில் நடைபெற்ற சமூக வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசியது:

“கத்தாரில் வசிக்கும் 7.80 லட்சம் இந்திய சமூகத்தினர் இரு நாடுகளுக்கு இடையேயான பாலமாக திகழ்கிறார்கள். இந்தியா மற்றும் கத்தார் இடையேயான உறவு வலுவடைந்து வருகிறது. கோவிட்-19 சவாலுக்கு இடையேயும் கடந்த ஆண்டு சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இருநாட்டு வர்த்தகத்தை நாம் பதிவு செய்து சாதனை படைத்தோம்.

இந்தியா, கத்தாரின் 3-வது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது. மார்ச் 2020 முதல் இந்தியாவில் கத்தாரின் அந்நிய நேரடி முதலீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு, ராணுவம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. கத்தார் பல்கலைக்கழகத்தில் இந்திய அமர்வை நிறுவவும், விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தில் ஒத்துழைப்பை அளிக்கவும் நேற்று நாங்கள் சம்மதம் தெரிவித்தோம். இரு நாடுகளின் புதிய கண்டுபிடிப்புகள் சூழலியலை இணைப்பதற்காக ஒரு புதிய நிறுவனங்களின் பாலத்தை அறிமுகப்படுத்தினோம்.

எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையுடன், நாம் அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தோடு அரசு பணியாற்றி வருகிறது. ஆளுகையிலும், சேவைகளின் விநியோகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, மக்களின் நலனுக்காக, தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, மக்களை மையப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

டிஜிட்டல் இந்தியா என்ற லட்சியமிக்க இயக்கத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு துவக்கியது. இதன்மூலம் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு உதவிகள் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டன.

5ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளோம். இதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு 450 பில்லியன் டாலர் வரை கிடைக்கும். 6ஜி சேவைகள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் துவக்கப்படும்.

அணுகக்கூடிய, உயர்தர கல்வி அமைப்புமுறையை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை புதிய தேசிய கல்வி கொள்கை வழங்குகிறது.

உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவில் பொருளாதாரத்தை உயர்த்தவும் இந்தியா முயற்சிகளை மேற்கொள்கிறது. எளிதான வாழ்வு மற்றும் எளிதான வர்த்தகத்தை வலியுறுத்துகிறோம்.

விடுதலையின் அமிர்த மகோத்சவத்தை நாடு கொண்டாடும் வேளையில் சுதந்திரத்திற்கு பிறகான நமது சாதனைகளைக் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வதுடன் புதிய இந்தியா, தற்சார்பு இந்தியா உறுதிப்பாட்டை நிறைவேற்ற நம்பிக்கையோடு முன்னேற வேண்டும்.

நமது அரசியலமைப்பின் அடித்தளமானது அனைவரையும் ‘உள்ளடக்கிய’ - யாரையும் விட்டு விடாத வகையில் உறுதியாகக் கட்டமைக்கப்பட்டது. அதுதான் பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசின் பார்வையும் கூட.

இந்த அரசின் கோட்பாடும் அதுவே. அதைத்தான் எதிரொலிக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறோம். அனைவரின் மீதும் அரசு அக்கறை கொண்டுள்ளது. குறிப்பாக, ஆதரவு தேவைப்படும் விளிம்புநிலை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம்.

வளர்ச்சியின் பலன்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் புதிய இந்தியாவை நோக்கிப் பணியாற்றி, உறுதியான பாரதம், வலுவான பாரதம், தற்சார்பு பாரதம் மற்றும் உன்னத பாரதத்தை அடைவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்போம்” என்று அவர் பேசினார்.

முன்னதாக, பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். அதனையடுத்து தொழிலதிபர் நவீன் குமார் ஜிண்டாலும் அதேபோன்றதொரு சர்ச்சைக் கருத்தை ட்விட்டரில் வெளியிட்டு பின்னர் நீக்கினர்.

இந்த இரண்டு விஷயங்களையும் கண்டித்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கண்டன ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலம் கல்வீசு வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டனர்.

ஆனாலும் வளைகுடா நாடுகள், இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் என 15 நாடுகள் நூபுர் சர்மா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமையன்று கண்டனம் தெரிவித்தன.நேற்று (திங்கள் கிழமை) ஈரான், ஈராக், பஹ்ரைன், பாகிஸ்தான், தாலிபான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், லிபியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுவரை மொத்தம் 15 இஸ்லாமிய நாடுகள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

இந்தப் பின்புலத்தில் கத்தாரில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் உரை முக்கியத்துவம் பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x