Published : 07 Jun 2022 08:06 AM
Last Updated : 07 Jun 2022 08:06 AM

24 ஆயிரம் அடி உயரத்தில் வீரர்கள் யோகா பயிற்சி

டேராடூன்: இந்தோ-திபெத் எல்லைப்படை போலீஸார் (ஐடிபிபி) 24 ஆயிரம் அடி உயர சிகரத்தில் ஏறி யோகா பயிற்சி செய்து சாதனை படைத்துள்ளனர்.

ஐடிபிபி சார்பில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஐடிபிபியின் மலையேற்றத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் குழு, கடல் மட்டத்திலிருந்து 22,850 அடி உயரத்தில் உள்ள மலை மீது யோகா பயிற்சி பற்றி செயல் விளக்கம் அளிக்கின்றனர். வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஐடிபிபி வீரர்கள் குழுவினர் 24,131 அடி உயரம் உள்ள அபி காமின் சிகரம் மீது ஏறி ‘பத்ரி விஷால் கி ஜே’ என கோஷமிட்டனர்.

இத்துடன் ஐடிபிபி குழுவினர் 230-க்கும் மேற்பட்ட முறை வெற்றிகரமாக மலையேறி சாதனை படைத்துள்ளனர். மத்திய இமயமலை பகுதியில் அபி காமின் சிகரம் அமைந்துள்ளது. இது காமெத் சிகரத்துக்கு அடுத்தபடியாக 2-வதுஉயரமான சிகரம் ஆகும்.

கடந்த 1962-ல் உருவாக்கப்பட்ட ஐடிபிபி படையின் மலையேற்றப் பிரிவினர் 1960-களின் இறுதியில் இமயமலையில் ஏறத் தொடங்கினர். ஒரே ஆண்டில் 9 சிகரங்களில் ஏறி சாதனை படைத்தனர். இமயமலைத் தொடரின் பல்வேறு கடினமான சிகரங்களில் இப்படைப் பிரிவினர் ஏறி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x