Published : 07 Jun 2022 04:30 AM
Last Updated : 07 Jun 2022 04:30 AM

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ. 10 கோடி நன்கொடை - திருநெல்வேலி பக்தர்கள் வழங்கினர்

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.10 கோடி நன்கொடைக்கான காசோலைகளை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டியிடம் வழங்கிய திருநெல்வேலி பக்தர் கோபால் பாலகிருஷ்ணன்.

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று ஒரே நாளில் திருநெல்வேலி பக்தர்களால் ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் வழங்கப்பட்ட அதிகபட்ச நன்கொடை இது என தெரியவந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் உண்டியல் மூலமும் நேரடியாகவும் பல்வேறு காணிக்கைகளை செலுத்துகின்றனர். தங்கக் காசுகள், வைரம், வைடூரியம், மரகதம் பதித்த ஆபரணங்கள், வீட்டு மனைப் பட்டாக்கள், வெள்ளிப் பொருட்கள், பத்திரங்கள் என ஏராளமான காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். இதனால், உலகிலேயே பணக்கார கடவுள் என திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் அழைக்கின்றனர்.

தற்போது தினமும் சராசரியாக ரூ.4 கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தப்படுகிறது. ஆண்டுக்கு உண்டியல் வருவாய் ரூ.1,500 கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பத்திரங்களை தவிர, தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு உலகமெங்கிலும் உள்ள பக்தர்கள் ரொக்கமாகவும் கோடிக்கணக்கில் காணிக்கை வழங்கி வருகின்றனர். மேலும், இ-உண்டியல் மூலம் ஆன்லைனி்லும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபரும் பக்தருமான கோபால் பாலகிருஷ்ணன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிராணதான திட்டம், கோ சம்ரக் ஷன திட்டம், தேவஸ்தான எலும்பு சிகிச்சை மருத்துவமனை (BIRRD), வேத பரிரத்ஷன அறக்கட்டளை, அன்னபிரசாத திட்டம், சர்வ ஸ்ரேயாஸ் திட்டம், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஆகிய 7 திட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.7 கோடி நன்கொடை வழங்கினார். மேலும், திருநெல்வேலியைச் சேர்ந்த ஏ-ஸ்டார் டெஸ்டிங் அண்ட் இன்ஸ்பெக் ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தேவஸ்தான வித்யாதன திட்டத்துக்கு ரூ.1 கோடி, பாலகிருஷ்ணா பெட்ரோல் பங்க் சார்பில் கோயில் கட்டும் திட்டத்துக்கு ரூ. 1 கோடி, ஸீ-ஹப் இன்ஸ்பெக் ஷன் சர்வீசஸ் சார்பில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாரம்பரிய அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி என மொத்தம் ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.

தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் ரூ.10 கோடி நன்கொடை பெறப்படுவது இதுவே முதல்முறை என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x