Published : 07 Jun 2022 04:55 AM
Last Updated : 07 Jun 2022 04:55 AM

2006 வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு

காஜியாபாத் நீதிமன்றத்துக்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட வலியுல்லா கான்.படம்: பிடிஐ

காஜியாபாத்: வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளி வலியுல்லா கானுக்கு மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதித்து காஜியாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்து பல்கலைக்கழகம் அருகில் உள்ள ஹனுமன் கோயில், கன்டோன்மென்ட் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில், 28 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் என போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

வாரணாசியில் உள்ள வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் வாதிட மறுத்துவிட்டனர். பின்னர், இந்த வழக்கை காஜியாபாத் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த 55 வயதான வலியுல்லா கான். 2006-ல் பிரயாக்ராஜ் நகரில் கைது செய்யப்பட்டார். இவர் வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத்-உல்-ஜெஹாத் அல் இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்றும் குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும் தெரியவந்தது. பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

காஜியாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் 38 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி வலியுல்லா கானுக்கு பல்வேறு பிரிவுகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜிதேந்திர குமார் சின்ஹா தீர்ப்பு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x