

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு முன்னர், அவரை அவதூறாக பேசியதற்காக, ஆமிர் கான் மன்னிப்பு கோரினாரா என்று அவரிடம் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு விளக்கம் கேட்டுள்ளது.
பாலிவுட் நடிகரான ஆமிர் கான் கடந்த 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த நிலையில், இந்தச் சந்திப்புக்கு குறித்து விஷ்வ இந்து பரிஷத் விளக்கம் கோரி, நடிகர் ஆமிர் கானுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான அசோக் சவுக்லே, "குஜராத்தில் 2005 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் நரேந்திர மோடிக்கு நேரடியாக தொடர்புடையதாக நடிகர் ஆமிர் கான் வெளிப்படையான கருத்தை வெளியிட்டிருந்தார்.
ஆனால், இப்போது பிரதமராக பதவியேற்ற பின்னர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துள்ளார். பிரதமரை சந்திப்பதற்கு முன், தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆமிர் கான் மன்னிப்பு கோரினாரா? என்று விளக்கம் தர வேண்டும். அவரது ட்விட்டர் பக்கத்தில் அது குறித்த விவரம் எதுவும் இல்லை.
இதற்கு ஆமிர் கான் விளக்கம் தரவில்லை என்றால், அவர் பிரதமர் மோடி தலைமையிலான அரசிடமிருந்து தற்போது தனிப்பட்ட முறையில் ஏதேனும் நலனைப் பெற முயற்சிக்கிறார் என்று மக்களுக்கு தோன்றக்கூடும். இதற்கான பதிலை ஆமிர் கான் தான் கூற வேண்டும். இது தொடர்பாகவே ஆமிர் கானுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்" என்றார் அவர்.