மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 11 மாடி கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 11 மாடி கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான பகுதியில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 60 தொழிலாளர்கள் பலியாயினர்.

விதிகளுக்கு புறம்பாக, தரமற்ற வகையில் கட்டப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அதே இடத்தில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டிடத்தை இடிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அந்த கட்டிடத்தை கட்டி வந்த கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 3 பேர் அடங்கிய ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.

அந்தக்குழு கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், கட்டிடத்தை இடிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in