'குறுகிய மனப்பான்மை கொண்ட விமர்சனம்' - இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா கண்டனம்

அரிந்தம் பாக்சி | கோப்புப் படம்.
அரிந்தம் பாக்சி | கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுடெல்லி: முகமது நபி தொடர்பான சர்ச்சைக் கருத்து விவகாரத்தில் கத்தார், ஓமன், சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் குறுகிய மனப்பான்மை கொண்ட விமர்சனத்தை முன்வைப்பதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளார் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அரிந்தம் பாக்சி, "இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறோம். இது குறுகிய மனப்பான்மை கொண்ட தேவையற்ற விமர்சனங்கள். இந்திய அரசு எல்லா மதங்களையும் மாண்புடன் அணுகுகிறது.

முகமது நபிகள் பற்றிய சில அவதூறான ட்வீட்களும், கருத்துகளும் தனி நபர்களால் முன்வைக்கப்பட்டவை. அவர்கள் நிச்சயமாக தேசத்தின் கருத்தை தெரிவிக்கவில்லை. மேலும், அவ்வாறு பேசியவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அவர்கள் சார்ந்த கட்சி எடுத்துள்ளது.

அப்படியிருந்தும், இஸ்லாமிய கூட்டமைப்பு தலைமைச் செயலகமானது, உள்நோக்கத்துடன் கூடிய தவறான, விமர்சனங்களை முன்வைக்கிறது. இது சிலரின் தூண்டுதலின் பேரில் எடுக்கப்படும் பிரிவினை முயற்சி என்றே தோன்றுகிறது. எனவே இதுபோன்ற சர்ச்சைகளை நிறுத்திக் கொள்ளுமாறு, மதவாத பார்வையுடன் பிரச்சினையை அணுகாமால் எல்லா மதங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் அதற்கான மரியாதையை உரித்தாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

சர்ச்சை பின்னணி: கடந்த வாரம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் முகமது நபி குறித்து அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார் பாஜக செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த நுபுர் சர்மா. தொடர்ந்து முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி இருந்தார் பாஜக-வின் நவீன் குமார். அதனை எதிர்த்து இஸ்லாமியர்கள் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சில கடைக்காரர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிகிறது. அதனால் அந்த பகுதியில் வன்முறை வெடித்தது. அது தொடர்பாக கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது அம்மாநில காவல்துறை. இந்நிலையில் தான் வளைகுடா நாடுகளின் கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன. அவதூறான கருத்தை தெரிவித்த பாஜக-வின் நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்தும், நவீன் குமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in