'பாஜக ஆட்சியில் நாடு உள்நாட்டுப் போரை நோக்கி நகர்கிறது' - லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்

'பாஜக ஆட்சியில் நாடு உள்நாட்டுப் போரை நோக்கி நகர்கிறது' - லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்
Updated on
1 min read

பாட்னா: பாஜக ஆட்சியில் நாடு உள்நாட்டுப் போரை நோக்கி நகர்கிறது என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு யாதவ், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சம்பூர்ண க்ராதி திவஸை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், "பாஜகவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது நாடு உள்நாட்டுப் போரை நோக்கி நகர்கிறதோ எனத் தோன்றுகிறது. நாட்டு மக்கள் இந்த வேளையில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியனவற்றிற்கு எதிராக போராட வேண்டும். நாம் ஒன்றிணைந்து போராடினால் தான் வெற்றி கிட்டும். மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்" என்று பேசினார்.

புதிய வழக்கை எதிர்கொண்டுள்ள லாலு: 1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு வரை பிஹார் முதல்வராக இருந்தார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ். லாலு ஆட்சிக் காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலங்களில் இருந்து ரூ. 950 கோடி பணம் மோசடியாக பெறப்பட்டது என்பது வழக்கு.
இதுதொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டன. இதுவரை 5 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு 19 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த மாதம் தான் லாலு ஜாமீனில் வெளிவந்தார்.
இத்தகைய சூழலில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிந்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தமுறை, அரசுப் பணி நியமனங்களில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in