Published : 06 Jun 2022 06:07 AM
Last Updated : 06 Jun 2022 06:07 AM
புவனேஸ்வர்: ஒடிசாவில் 21 பேர் அடங்கிய புதியஅமைச்சரவை நேற்று பதவியேற்றது. 13 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 8 பேர் இணையமைச்சர் களாகவும் பதவியேற்றனர்.
கடந்த 1997 டிசம்பர் 26-ம் தேதி ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தொடங்கப்பட்டது. அந்த கட்சியின் நிறுவனரும், தலைவருமான நவீன் பட்நாயக் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி ஒடிசாவின் முதல்வராக முதல்முறையாக பதவியேற்றார். அன்று முதல் இன்று வரைஅவர் ஒடிசாவின் முதல்வராக நீடிக்கிறார். அவர் முதல்வராக பதவியேற்று 22 ஆண்டுகள் ஆகிறது.
தற்போது 5-வது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிஜு ஜனதா தள அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த சூழலில் ஒடிசாவின் 20 அமைச்சர்களும் நேற்று முன்தினம் பதவியைராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து 21 பேர் அடங்கிய புதியஅமைச்சரவை நேற்று பதவியேற்றது. 13 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 8 பேர் இணையமைச்சர் களாகவும் பதவியேற்றனர்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் கணேஷி லால் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பழைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 10 புதிய முகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பழைய அமைச்சரவையில் 2 பெண்கள் மட்டும் இருந்தனர். புதிய அமைச்சரவையில் பெண்களின் எண் ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
முதல்வர் நவீன் பட்நாயக் உள்துறையை தன்வசம் வைத்துள்ளார். அதோடு பொது நிர்வாகம்,பணியாளர் நலன் துறையும் அவரிடம் உள்ளது. நிரஞ்ஜன் புஜாரிக்குநிதித் துறை, நபா கிஷோர்தாஸுக்கு சுகாதாரம், பிரமிளாவுக்கு வருவாய் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒடிசா சட்டப்பேரவை தலைவர் எஸ்.என்.பட்ரோ நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் விக்ரம் கேசரி அருக்ஹா, சட்டப்பேரவைத் தலைவராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் 2024-ம் ஆண்டில் ஒடிசாவில் சட்டப்பேரவைத் தேர்தலும் மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். செயல்படாத அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்புவழங்கப்பட்டிருக்கிறது. வரும் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக இடையேகடுமையான மும்முனை போட்டி ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT