Published : 23 Jun 2014 01:06 PM
Last Updated : 23 Jun 2014 01:06 PM

ஜூலை 10-ல் மத்திய பட்ஜெட்: 8-ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் ஜூலை 10-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பட்ஜெட் கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் என தெரிகிறது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 மாதங்களுக்கு மட்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட் ஒதுக்கீடுகள் ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்கு முன்பாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

ஜூலை 7-ல் பட்ஜெட் கூட்டத்தொடர்

இதையொட்டி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் இந்தக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 14-ம் தேதி நிறைவடைகிறது. தேவைப்பட்டால் மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.

கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான ஜூலை 8-ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப் பட உள்ளது. 9-ம் தேதி பொரு ளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஜூலை 10-ம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2014-15-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் என்பதால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருப்பினும் கூன் விழுந்த இந்திய பொருளாதாரத்தை நிமிர்த்த சில கசப்பான மருந்துகளை உட்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக சுட்டிக் காட்டியிருப்பதால் மத்திய பட்ஜெட்டில் பல்வேறு கடுமையான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.

முக்கிய மசோதாக்களுக்கு முன்னுரிமை

இதனிடையே பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், போலாவரம் அணைத் திட்டம், டிராய் திருத்தச் சட்டம், செபி தொடர் பான சட்டம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மசோதாக்களை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ரயில் கட்டண உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பத் திட்டமிட்டுள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து?

காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்பதும் இந்தக் கூட்டத் தொடரில் தெரியவரும். மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற 54 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸுக்கு 44 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இருப்பினும் அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில் தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக முடிவு எடுக்கப்படும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

மேலும் துணை சபாநாயகரும் இந்த கூட்டத்தொடரில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x