Published : 05 Jun 2022 05:24 AM
Last Updated : 05 Jun 2022 05:24 AM

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி காஷ்மீரை விட்டு வெளியேறும் பண்டிட் குடும்பங்கள்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பண்டிட் ஊழியர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த வங்கி மேலாளர் மற்றும் பள்ளி ஆசிரியை சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது காஷ்மீர் பண்டிட் குடும்பங்களைிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பண்டிட் ஊழியர்கள், தங்களை, இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு பகுதியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கையை அரசு தரப்பு ஏற்கவில்லை. அதனால் இந்த விஷயத்தில் ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி தலையிட்டு, அச்சத்தில் உள்ள பண்டிட் குடும்பங்களை காஷ்மீரை விட்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என காஷ்மீர் பண்டிட்கள் சங்கம் (கேபிஎஸ்எஸ்) கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தெற்கு காஷ்மீரின் மேட்டன் மற்றும் வேசு, ஸ்ரீநகரின் ஷேக்போரா மற்றும் வடக்கு காஷ்மீரின் பாராமுல்லா மற்றும் குப்வாரா ஆகிய பகுதிகளில் வசிக்கும் பண்டிட் குடும்பங்கள் தங்கள் வீடுகளை காலி செய்து இரவோடு இரவாக வாகனங்களில் செல்வதை நேற்று காண முடிந்தது.

காஷ்மீரில் இருந்து 290 கி.மீ தொலைவில் ஜம்மு உள்ளது. காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் உள்ள மேட்டன் நகரில் வசித்த பண்டிட் குடும்பங்களில் 80 சதவீதம் பேர் கடந்த 1-ம் தேதி முதல் ஜம்முவுக்கு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பண்டிட் ஊழியர் ஒருவர் கூறுகையில், “அரசு நிர்வாகம் வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறது. சமீபத்தில் நடந்த படுகொலை சம்பவங்களுக்குப்பின் நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. மேட்டன் நகரில் வசித்த 96 பண்டிட் குடும்பங்களில், 12 குடும்பங்கள் மட்டுமே இன்னும் உள்ளது. வரும் நாட்களில் அவர்களும் வெளியேறிவிடுவர்” என்றார்.

மேட்டன் பகுதியில் போராட்டம் நடத்தும் மற்றொரு பண்டிட் கூறுகையில், ‘‘காஷ்மீரில் படுகொலை சம்பவங்கள் தொடர்கின்றன. சமீபத்திய படுகொலைகள் எங்கள் நம்பிக்கையை தகர்த்துள்ளது. காஷ்மீரில் நிலைமை சீரடையும் வரை, பண்டிட் ஊழியர்களை காஷ்மீருக்கு வெளியே பணியமர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. மாவட்டங்களின் தலைநகரங்களில் எங்களை பணியமர்த்துவது எங்களுக்கு பாதுகாப்பாக இருக்காது” என்றார்.

காஷ்மீர் பண்டிட் குடும்பங்களுக்காக ஜம்முவில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் ஜக்தி என்ற முகாம் அமைக்கப்பட்டது. இங்கு நேற்று மட்டும் காஷ்மீரின் பாராமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களில் இருந்து 120 பண்டிட் குடும்பங்கள் வந்துள்ளன.

இந்நிலையில், காஷ்மீர் பண்டிட் சங்கர்ஷ் சமிதி அமைப்பின் தலைவர் சஞ்சய் கே.டிக்கு, ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காஷ்மீர் பகுதியில் வசிக்கும் பண்டிட் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் இங்குள்ள தீவிரவாதிகளால் நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எங்களை பாதுகாக்க யூனியன் பிரதேச நிர்வாகம் தவறிவிட்டது. காஷ்மீர் பண்டிட்கள் மற்றும் இந்துக்கள் காஷ்மீர் பகுதியை விட்டு வெளியேற விரும்புகின்றனர்.

ஆனால் அரசு நிர்வாகம் அனுமதிக்கவில்லை. சிலர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, தங்கள் சொந்தங்களுக்கு காஷ்மீருக்கு வெளியே பணி நியமனம் பெறுகின்றனர். ஒருபுறம் எங்களை பாதுகாக்க அரசு நிர்வாகம் தவறிவிட்டது. மறுபுறம், எங்களை காஷ்மீரை விட்டு செல்லவும் அனுமதிக்கவில்லை.

இது இந்திய அரசியல் சாசனத்தின் 21வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட வாழ்வுரிமைக்கு எதிரான செயல். எனது வேண்டுகோளை பொதுநல வழக்காக ஏற்க வேண்டும். காஷ்மீர் பகுதியில் வசிக்கும் சிறுபான்மையினரை காஷ்மீருக்கு வெளியே பணியமர்த்த யூனியன் பிரதேச அரசு மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x