Published : 05 Jun 2022 05:51 AM
Last Updated : 05 Jun 2022 05:51 AM

7 ஆண்டுகளாக குழாய் மூலம் சுவாசித்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சையில் மீண்டும் வந்தது பேசும் திறன்

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஸ்ரீகாந்த். இவன் குழந்தையாக இருந்த போது தலையில் அடிபட்டு பேச்சு வராமல் போய்விட்டது. அப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறுவனின் கழுத்து பகுதியில் டிரக்கியாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டது. குழாய் வழியாக 7 ஆண்டுகளாக சிறுவன் ஸ்ரீகாந்த் சுவாசித்து வந்தான். இதனால் வாய் வழியாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்தான்.

இந்நிலையில் டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் சிறுவன் ஸ்ரீகாந்துக்கு அறுவை சிகிச்சை செய்து பேச்சு வரச் செய்துள்ளனர்.

மருத்துவமனையில் காது, மூக்கு தொண்டை பிரிவு தலைவர் டாக்டர் மணீஷ் முஞ்சால் கூறும்போது, “டிரக்கியாஸ்டமி காற்றுக் குழாய் வழியாக ஸ்ரீகாந்த் சுவாசித்து வந்தான். கடந்த 15 வருடங்களாக இதுபோன்ற நோயாளியை நான் பார்த்ததே இல்லை. இதையடுத்து மார்புப் பகுதி, குழந்தை நல மருத்துவம், அனஸ்தீஷியா பிரிவுகளைச் சேர்ந்த டாக்டர்கள் குழு உருவாக்கப்பட்டு சிறுவனுக்கு சிகிச்சை அளித்தோம்" என்றார்.

மார்பு அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் சப்யாசாச்சி பால் கூறும்போது, “இந்த அறுவை சிகிச்சை எங்களுக்கு சவாலான விஷயமாக இருந்தது. இது சில சமயம் நோயாளி இறப்பு வரை செல்லக்கூடும்.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. டாக்டர்கள் குழு சுமார் ஆறரை மணி நேரம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். குரல்வளையில் இருந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது. தற்போது சிறுவனுக்கு பேச்சுத் திறனும் வந்துள்ளது எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி. ஸ்ரீகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமாக உள்ளார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x