கான்பூர் கலவரத்தில் 1,040 பேர் மீது வழக்கு: இதுவரை 36 பேர் கைது

உத்தர பிரதேசம் கான்பூரில் நேற்று முன்தினம் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த அந்த நகரில் காவல் துறை சார்பில் நேற்று அணிவகுப்பு நடத்தப்பட்டது. படம்: பிடிஐ
உத்தர பிரதேசம் கான்பூரில் நேற்று முன்தினம் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த அந்த நகரில் காவல் துறை சார்பில் நேற்று அணிவகுப்பு நடத்தப்பட்டது. படம்: பிடிஐ
Updated on
2 min read

கான்பூர்: உத்தர பிரதேசம், கான்பூர் கலவரம் தொடர்பாக 1,040 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அண்மையில் அளித்த பேட்டியில், முகமது நபிக்கு எதிராக கருத்துகளை கூறியதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து உத்தர பிரதேசம் கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கடையடைப்பு நடத்தப்பட்டது. இதன்படி கான்பூரின் பரேட் சந்தையில் பாதியளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த சூழலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்கள், பரேட் சந்தையில் திறந்திருந்த கடைகளை மூடும்படி வற்புறுத்தினர். இதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சுமார் 100 பேர் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். எதிர்தரப்பும் பதில் தாக்குதலில் ஈடுபட்டதால் கலவரம் வெடித்தது.

தகவல் அறிந்து கான்பூர் காவல் ஆணையர் விஜய் சிங் மீனா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் குவிந்தனர். மாநில ஆயுதப்படை காவலர்களும் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தை கலைக்க முதலில் தடியடி நடத்தப்பட்டது. பின்னர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. கலவரம் மற்றும் போலீஸ் தடியடியில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

கான்பூரில் 2-வது நாளாக நேற்றும் பதற்றமான சூழல் நீடித்தது. கலவரம் தொடர்பாக காவல் துறை தரப்பில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தில் பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி அடையாளம் தெரிந்த 40 பேர் மீதும், அடையாளம் தெரியாத 1,000 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஹயாத் ஜாபர் ஹஸ்மி கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

"என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்" என்று அழைக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா கான்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலவரம் குறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

கான்பூரின் தெருக்கள் குறுகலானவை. எதிர்பாராத வகையில் கலவரம் வெடித்ததால் நிலைமையை கட்டுப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. கலவரம் சுமார் 5 மணி நேரம் வரை நீடித்தது. இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் வீடியோ பதிவுகளை ஆதாரமாக வைத்து கலவரக்காரர்களை கைது செய்து வருகிறோம். கலவரத்தின் பின்னணியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கான்பூர் காவல் ஆணையர் விஜய் சிங் மீனா கூறும்போது, "குண்டர்கள், சமூக விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சமூக விரோதிகளின் சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலவரம் தொடர்பான முழு விவரமும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in