

பிஹாரில் மீண்டும் ஆள் கடத்தல் அதிகரித்து விட்டதாக புகார் கிளம்பி உள்ளது. அம் மாநிலத்தின் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது.
மாநில முன்னாள் அமைச்சரும் பாஜகவின் சுகவுலி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராம் சந்திரா சஹானிக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ரூ.10 லட்சம் தர வேண்டும் எனவும் இல்லையேல் கடத்தி கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து மூன்று நாட்களாக ஒரே மொபைல் எண்ணிலிருந்து இந்த மிரட்டல் வரவே சஹானி, சுகவுலி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு ஒரு மாதம் முன்பாக அதே தொலைபேசியிலிருந்து பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் நார்கித்யா தொகுதி எம்.எல்.ஏ.வான ஷியாம் பிஹாரி பிரசாத் என்பவருக்கும் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது.
இதன் சில தினங்களுக்குப் பிறகு தலைநகர் பாட்னாவில் வசிக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி வசீமுதீன் அஞ்சும் என்பவரின் பேத்தி தாஹிரா கடத்தப்பட்டார். பிஹார் மாநில மகளிர் ஆணைய உறுப்பினரும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான ரேணு குஷ்வாஹாவின் 30 வயது மகன் விபின்குமார், கடந்த மாதம் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்டார். ஆனால், பத்து நாட்களுக்குப் பின் அவரது சடலம் ஜார்க்கண்ட் மாநில எல்லையில் உள்ள ரஜவுலி காடுகளில் கிடைத்தது.
இதுகுறித்து, ‘தி இந்து'விடம் பாட்னா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனு மஹாராஜ் கூறுகையில், ‘‘எம்.எல்.ஏ.க்களை மிரட்டிய வழக்கில் துபே எனும் ‘தாதா’ கும்பலில் இருந்து இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஐஏஎஸ் அதிகாரியின் பேத்தியைக் கடத்தியது அவரிடம் ஓட்டுநராக இருந்த ராஜ்குமார். இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளனர்’’ என்றார்.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சி செய்தபோது ஆள் கடத்தல் அதிகமாக இருந்ததாகப் புகார் இருந்தது. இதை முக்கிய பிரச்சனையாக முன் வைத்து அவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தவர் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார். இவரது ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கருதப்பட்ட ஆள் கடத்தல் இப்போது, மீண்டும் அதிகரித்து வருகிறது.
முன்னதாக, இதுகுறித்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர் அபியாணந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆள் கடத்தல் குற்ற வழக்குகள் அதிகமாகி விட்டது உண்மைதான். அனைத்து புகார்களும் முறையாக பதிவு செய்யப்படுவதே இதற்குக் காரணம். இதற்கு முன்பு இதைவிட அதிகமாக இருந்தும் அவை பதிவு செய்யப்படாமல் இருந்தது’’ என்றார்.