

பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை மார்பிங் செய்து ஃபேஸ் புக்கில் வெளியிட்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி டவுனை சேர்ந்தவர் முகமது மெஹபூப் (25). இவர் நகைக் கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து, தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டார் முகமது மெஹபூப்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் காலில் நரேந்திர மோடி விழுவது போன்ற அசல் புகைப்படத்தை, இஸ்லாமிய இயக்கத் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதின் ஒவைசியின் சகோதரர் அக்பரூதின் ஒவைசி காலில் விழுவது போன்று மார்ஃபிங் செய்திருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த கங்காவதி டவுன் பாஜக நிர்வாகி மனோகர் கவுடா கடந்த 15-ம் தேதி போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக முகமது மெஹபூப்பிடம் கங்காவதி போலீஸார் விசாரணை நடத்திய தில், மோடியின் படத்தை மார்ஃபிங் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து முகமது மெஹபூப் மீது இந்திய தண்டனை சட்டம் 153-ஏ பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்வு கைது செய்தனர். கொப்பல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட மெஹபூப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.