Published : 03 Jun 2022 04:41 PM
Last Updated : 03 Jun 2022 04:41 PM

இன்னுமொரு பெரும் இடம்பெயர்தலுக்கு தயாராகிறார்களா காஷ்மீரி பண்டிட்டுகள்?!

ஸ்ரீநகர்: இன்னுமொரு பெரிய இடம்பெயர்தலுக்கு (மாஸ் மைக்ரேஷனுக்கு) காஷ்மீர் பண்டிட்டுகள் தயாராகும் சூழல் உருவாகியிருக்கிறதா? அப்படித்தான் சில விவாத அரங்கங்கள் களமாடிக் கொண்டிருக்கின்றன. காரணம் கடந்த சில நாட்களாக தங்களின் உயிருக்கு உத்தரவாதம் கோரி காஷ்மீர் பண்டிட்டுகள் சாலைகளில் இறங்கி நடத்தும் போராட்டங்கள்.

மே 1 ஆம் தேதி தொடங்கி அடுத்தடுத்து நடைபெறும் திட்டமிட்ட படுகொலைகள் காஷ்மீரி பண்டிட்டுகளை வீதிகளில் இறங்கி போராடச் செய்துள்ளது. எங்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் தருவீர்களா? என்ற கேள்விகளுடன் அவர்கள் போராடி வருகின்றனர்.

புல்வாமா மாவட்டத்தின் ஹால், புட்காம் மாவட்டத்தின் ஷேக்போரா முகாம்களில் உள்ள காஷ்மீரி பண்டிட்டுகள் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையுடன் அன்றாடம் வீதிகளில் இறங்கிப் போராடிகின்றனர். 40 வயதான அமித் கவுல் அரசாங்க ஊழியர். அவர் கூறுகையில், நான் ஏற்கெனவே முகாமில் இருந்து வெளியேறிவிட்டேன். விரைவில் ஜம்முவுக்கு செல்லவிருக்கிறேன் என்றார். இன்னும் சிலர் முகாம்களில் இருந்து வெளியேறவிடாமல் ஆங்காங்கே தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றனர்.

வேரிலிருந்து.. உடனே வெளியேறியாக வேண்டும் என்ற பதற்றத்தின் வேரைத் தேடினால் அது 1980களின் ஆரம்பத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களுக்கு அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகள் தூபம்போட ஆரம்பித்திருந்தன. 1984 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத் (JKLF) தலைவர் மக்பூல் பட்டுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுதான் பிரிவினைவாதிகளுக்கு தீவிரவாத அமைப்புகள் மேலும் தூபம் போட காரணாமாக இருந்தது என்று வரலாறு சொல்கிறது.

இதன் நீட்சியாக 1986ல் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் மத வன்முறைகள் அன்றாட நிகழ்வாகியிருந்தன. காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக மூளைச் சலவை செய்யப்பட்டு தீவிரவாத இயக்கங்களில் சேர்க்கப்பட்டனர். இந்து கோயில்களும், இந்துக்களின் வீடுகளும் தான் முதல் இலக்கு என்று அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய தேர்தல்: 1987ல் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. மத்தியில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தது. ( 1984 முதல் 1989 வரை அந்த ஆட்சி இருந்தது). அந்த அரசு காஷ்மீரில் மீண்டும் ஃபரூக் அப்துல்லாவை முதல்வராக்க திட்டமிட்டது. அது நிறைவேறவும் செய்தது. இது உள்ளூர் பிரிவினைவாத சக்திகளை கடும் கோபத்தில் தள்ளியது.

1989 டிசம்பரில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதே மாதம் ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம், உள்துறை அமைச்சராக இருந்த முஃப்தி சயீதின் மகள் ருபயா சயீதை கடத்திச் சென்றது. ருபாயாவை மீட்க சிறையில் இருந்து ஜேகேஎல்எஃப் வீரர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டனர். இது பிரிவினைவாதிகளின் மிகப்பெரிய வெற்றி. அதே ஆண்டு நீலகந்த் கஞ்சூ என்ற நீதிபதி கொல்லப்பட்டார். இவர் தான் மக்பூல் பட்டுக்கு மரண தண்டனை வழங்கியவர்.

ஹிஜ்புல் அமைப்பு காஷ்மீர் பிரிவினைவாதிகளின் போராட்டத்திற்கு மதச் சாயம் பூசியது. ஆசாதி குரலுடன் மத வெறியும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கியது. காஷ்மீர் பண்டிட்டுகளின் ஹிட் லிஸ்ட் என்று அச்சடித்து வெளியிடப்பட்டது.

கடத்தல், படுகொலை சம்பவங்களைத் தொடர்ந்து 19 ஜன 1990ல் அப்போதைய பிரதமர் விபி சிங் ஜம்முவில் மத்திய ஆட்சியை அமல்படுத்தினார். ஜக்மோகன் ஆளுநர் ஆக்கப்பட்டார். மாநில முதல்வர் ஃபரூக் அப்துல்லா அதிருப்தியில் ராஜினாமா செய்தார். அரசியல் அதிருப்தி கொந்தளிப்பாக மாறியது.

பண்டிட்டுகள் குறிவைக்கப்பட்டனர். காஷ்மீர் பண்டிட்டு சமூக பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். 20 ஜன 1990, ஆரம்பித்து ஒரே வாரத்தில் 75,343 காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறினர். மார்ச் 1990ல் மேலும் 70,000 பேர் வெளியேறினர். 650 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் புள்ளி விவரங்களை காஷ்மீர் பண்டிட் சங்கர்ஷ் சமிதி உறுதி செய்துள்ளது. அந்த காலகட்டத்தில் மொத்தமாக 1.5 லட்சம் பண்டிட்டுகள் வெளியேறினர்.

ஏப்ரல் 1990ல் காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் அல்லது பலியாகுங்கள் என்ற பகிரங்க மிரட்டல்கள் பண்டிட்டுகளுக்கு விடுக்கப்பட்டன. ஆனால் அதே வேளையில், சில கஷ்மீர் முஸ்லிகளும் இந்துக்களை பாதுகாத்தனர் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதுபோலவே, 1990 ஜனவரி 21, காஷ்மீர் முஸ்லிம்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். ஜெக்மோகன் ஆளுநராக நியமிக்கப்பட்ட இரண்டு நாட்களில் ஸ்ரீநகரின் காவ்காடல் பாலத்தில் பொது மக்கள் மீது சிஆர்பிஎஃப் துப்பாக்கிச் சூடு நடத்தியது. 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இவர் (ஜெக்மோகன்) 1994ல் பாஜகவில் இணைந்தார். 1990ல் காஷ்மீரி பண்டிட்டுகளை பாதுகாக்க எதுவுமே செய்யவில்லை என்ற விமர்சனத்துக்கு உள்ளானார் என்பதை வரலாற்றின் தனிப் பக்கங்கள்.

காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்டுகள் ஜம்முவிலும், டெல்லியிலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மூச்சுமுட்டும் முகாம்களில் இருந்து சொந்த மண்ணுக்கு திரும்ப வேண்டும் என்ற அவர்களின் நியாயமான கோரிக்கைகள் முழுமையாக தீர்ந்தபாடில்லை. 1990 ஜனவரியில் 1.5 லட்சம் இந்துக்கள் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறினர். நிலங்களை, வீடுகளை, உடைமைகளை விட்டுவிட்டு உயிரை மட்டும் கையில் ஏந்தி கிளம்பினர்.

இப்போது அவர்களின் அச்சம் மீண்டும் 1990 திரும்பிவிடுமோ என்பதுதான்.

காரணம் அண்மை நிகழ்வுகள். கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரே மாதத்தில் 7 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். 5 நாட்கள் இடைவெளியில் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன. இப்போது இந்த ஆண்டு மீண்டும் இந்த படுகொலைகள் ஆரம்பித்துள்ளன. மே 1 ஆம் தேதி தொடங்கி 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இந்துக்கள், வெளிமாநிலத்தவரே அடங்குவர்.

இன்னுமொரு பெரும் இடம்பெயர்தலுக்கு தயாராகிறார்களா காஷ்மீர் பண்டிட்டுகள்?! என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொகுப்பு: பாரதி ஆனந்த்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x